Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்

Saturday, June 30, 2007

எல்லைக் கோடற்ற கடற் பரப்பில்

சிங்களவர் பின்னும் சூழ்ச்சி வலைகள்!
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
விடுதலை பெற்ற நாள் முதலாக, பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழரைக் கொலை செய்வதற்காகலே இலங்கையின் கடற்படை பயன்பட்டு வந்துள்ளது.
தமிழ்நாட்டுத் தமிழரைச் சுட்டுக் கொன்று பழகியவர்கள் சிங்களக் கடற்படையினர். 1950களின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையில் வாழும் தம் உற்றார் உறவினரைச் சந்தித்து உறவு கொண்டாட வந்த தமிழகத் தமிழரே இலங்கைக் கடற்படையின் முதற் குறி. இவர்களைக் கள்ளத் தோணி என அழைத்துக் கொச்சைப் படுத்தினர், சுட்டுத் தள்ளினர்.
முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உறவுகள் இன்றும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருவர், கலைஞரின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உறவினர்கள் மன்னாரிலும் அநுராதபுரத்திலும் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்து இராமேஸ்வரத்தில் தங்கிய கனகசுந்தரம்பிள்ளையே அப்துல் கலாமின் பள்ளிக்கால ஆங்கில ஆசிரியர்.
வடகிழக்கு மாகாணத்தின் ஒரே முதலமைச்சராகப் பணி புரிந்த வரதராஜப் பெருமாளின் தந்தையாரும் முன்னோரும் தமிழகத்து இராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.கைய நெருங்கிய உறவுகளைக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அக் கடலைக் கடந்து தத்தம் உறவுகளைத் தொடர விழைந்ததற்குப் பெற்ற பரிசு, கள்ளத் தோணி என்ற பட்டப் பெயரும் சிங்களக் கடற்படையின் குண்டு மழையும்தான்.
கள்ளத் தோணிகளென்றும் கடத்தல்காரர் என்றும் பட்டம் சூட்டி, அவர்களை விரட்டிக் கொல்வதையே தொழிலாகக் கொண்டு, பாக்கு நீரிணையையும் மன்னார் வளைகுடாவையும் தன் ஆதிக்கத்துள் வைத்திருந்த சிங்களக் கடற்படை, 1970களில் இவர்களுக்குப் புதுப் பெயர் சூட்டியது. போராளிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அத்துமீறிய தமிழக மீனவர் என்றும் காரணம் காட்டி இவர்களைச் சுடத் தொடங்கியது. இலங்கைக் கடல் எல்லைக்குள்ளும் சுட்டுக் கொன்றது. இந்தியக் கடற்பரப்பிலும் சுட்டுக் கொன்றது.
கடற்பரப்பைத் தாண்டி இந்திய நில எல்லைக்குள் வந்து, ஒருமுறை பாம்பன் தீவுக்குள் நுழைந்து, கரையோர மீனவக் கிராமமான ஓலைக்குடாவுக்குள் புகுந்து அந்தக் கிராமத்தையே தீ வைத்துக் கொளுத்தியது. கேட்பாரற்றுத் தமிழக மீனவர் தம் எல்லைக்குள்ளேயே வதங்கி இறந்தனர். தம் குடிசைகளை இழந்தனர். தம் படகுகளைத் தொலைத்தனர். தம் வலைகள் எரியப் பார்த்துக் கொண்டிருந்தனர். தப்பினோர் தறிகெட்டு ஓடினர்.
பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா, ஆகிய இரு கடல்களின் இரு மருங்கிலும் வாழ்வோர் தமிழரே. மருந்துக்குக் கூடச் சிங்களக் கிராமத்தைக் காணமுடியாது. ஆனாலும் துப்பாக்கியால் சுடுபவர்கள் சிங்களவர்கள். அந்தக் கடற்படையில் மருந்துக்குக் கூடத் தமிழர் எவரும் இல்லை.
முழுக்க முழுக்கத் தமிழருக்குச் சொந்தமான, தமிழரின் வாழ்வாதாரங்களுக்கு அடிப்படையான, தமிழரின் உறவுகளுக்கு உயிரூட்டுகின்ற கடற் பரப்பு. அந்தக் கடற் பரப்பிலே சிங்களக் கடற்படை, பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழரைக் கொன்று குவித்து வருகின்றது. கள்ளத் தோணி என்றும், கடத்தல்காரர் என்றும், போராளி என்றும், பயங்கரவாதி என்றும், அத்துமீறிய மீனவர் என்றும் ஏதோ ஒரு காரணம் கூறி, எப்படியாவது கொலைசெய்ய வேண்டும் எனக் கருதி, தமிழரை அழிப்பதையே தொழிலாகக் கொண்டு கொன்று குவித்து வருகிறது.
மன்னார் வளைகுடாவின் தெற்கே, இலங்கையின் மேற்குக் கரை ஓரத்தில், சிங்கள மீனவர்களின் கிராமங்களில் இருந்து மீன்பிடிக்க வரும் சிங்கள மீனவர் வழி தவறியோ, தெரிந்தோ இந்தியக் கடல் எல்லைக்குள் வருவதும் மீன் பிடிப்பதும் வழமை. அந்த மீனவர்களுள் எவர் ஒருவரைக் காணவில்லை என்றாலே கொழும்பு அரசுக்கு வேகம் வரும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலமாகத் தூத்துக்குடிக்கும் இராமேஸ்வரத்துக்கும் செய்தி அனுப்பி அச் சிங்கள மீனவர்களை மீட்க உரியன செய்யும்.ந்நாள் வரை இந்திய எல்லைக்குள் அத்து மீறிய சிங்கள மீனவர் ஒருவரேனும் இந்தியப் படையினரால், காவல் துறையினால் அல்லது தமிழக மீனவர்களால் சுடப்பட்டார்கள் என்ற செய்தியோ, அந்த மீனவர்களின் படகுகள், வலைகள், மீன் பிடிபாடுகள் அழிக்கப்பட்டன என்றோ ஒரு செய்தியை யாராவது காட்டமுடியுமா?

எல்லைக் கோடற்ற கடற் பரப்பில் நாட்டு எல்லைகளை மீனவர் கடப்பது, உலகெங்கும் நடைபெறும் நாளாந்த நிகழ்வு. அத்தகைய மீறல்களைக் கைது மூலம் தீர்ப்பதே உலக வழமை. சகட்டுமேனிக்குச் சுட்டுத் தள்ளுவது சிங்களக் கடற்படையின் தமிழர் அழிப்புக் கொள்கையின் நீட்டமே!
கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகத் தமிழக மீனவரைச் சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்று வந்தனர். முதலில் கொழும்பு அரசை எச்சரித்த தமிழக முதல்வர், அடுத்த நாள், இனியும் இக்கொலைகள் நிகழுமாயின், மீனவர் கைகள் மீன்களை மட்டும் பிடித்துக் கொண்டிரா எனக் கூறினார். அதற்குப் பின்னரும் கொலைகள் தொடர்ந்த நிலையில் திமுக அணியினர் இலங்கைத் துணைத் தூதரைச் சந்தித்தனர். துணைத் தூதரின் கூட்டுக் கண்காணிப்பு முன்மொழிவைத் தமிழக முதல்வர் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்திய இலங்கைக் கடல் எல்லையின் இரு புறமும் இரு கடற் படைகளும் இணைந்து செயற்பட்டு, இருநாட்டுச் சட்டமீறல்களை நிறுத்துவதே கூட்டுக் கண்காணிப்பின் அடிப்படை.
கடந்த 60 ஆண்டுகளாக, தென் முனையில் யாருடனும் வம்புக்குப் போகாத இந்தியக் கடற்படையை ஈழத்தமிழருடன் மோத வைப்பதே இந்தச் சூழ்ச்சி வலையின் பின்னணி.
ஜே. ஆர். ஜெயவர்த்தனா எந்த அணுகுமுறையைக் கையாண்டாரோ அதே அணுகுமுறையை இராஜபக்சா கையாள்கிறார்.
இந்தியப் படை இலங்கை மீது படையெடுத்து வந்தால் நிறைகுடம் வைத்து வரவேற்போம் எனக் கூறியவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. தமிழரைக் காக்க வரும் படையைத் தமிழருக்கு எதிராகத் திருப்பும் இராஜதந்திரத்தை அவர் கணித்து வைத்திருந்தார். இந்திய அமைதிப் படை இலங்கைக்குப் போனதும் ஆயிரக் கணக்கில் தமிழரைக் கொலை செய்து திரும்பியதும் வரலாறு. தமிழரைக் காக்கப் போன படை சிங்கள வீரர் ஒருவரையோ, சிங்களப் பொதுமகர் ஒருவரையோ கொல்லவில்லை என்பதும் வரலாறு. சிங்களவரின் இராஜதந்திர வெற்றிக்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.
தமிழரைக் கொன்றொழிக்கும் ஒரே நிகழ்ச்சித் திட்டத்துடன் 60 ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் கொழும்பு அரசு, கூட்டுக் கண்காணிப்புப் போர்வைக்குள், இந்திய அரசை ஈர்த்து, ஈழத்தமிழருடனான தன் பகையை இந்தியா மூலம் தீர்க்க முயல்கிறது.
இந்திய நாவாய் வீரரைத் தன்பக்கம் இழுப்பது முதற் படி. இந்தியக் கடற் படைக் கப்பல்களை ஈர்ப்பது இரண்டாவது படி. கடற்படை விமானங்களைக் கேட்பது மூன்றாவது படி. ஈழத்தமிழரை அழிக்கும் பணியில் இந்தியாவை நேரடியாக ஈடுபட வைப்பது நான்காவது படி. முன்பு போல இந்திய - ஈழத் தமிழர் உறவு முறிவதற்குப் படிநிலை முயற்சியில் ஈடுபடும் கொழும்பு அரசின் சூழ்ச்சி வலையில் இந்தியா சிக்கி விடுமோ என்ற அச்சம் உண்டு.
விடுதலைப் புலிகளே தமிழக மீனவர்களைக் கொல்கிறார்கள் என்பதே கொழும்பின் இராஜதந்திரச் சூழ்ச்சிப் பாதையின் முதல் அறிவிப்பு. புதுதில்லி நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசுவாமி, இலங்கையின் இந்தக் கபட வேட இராஜதந்திரச் சூழ்ச்சி அறிவிப்பைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர், இந்தியாவுடன் சுமுக உறவு வைத்துக் கொள்ளவே விழைகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை இந்தியா புரிந்து கொண்டு, சிங்களவரின் சூழ்ச்சி வலையில் சிக்காதிருக்கவேண்டும்.

இராமர் பாலம் என்பது கட்டுக்கதை

அறிவியல் பார்வைக்கு முன் உடைந்து நொருங்கும் கற்பனைக்கதைகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சேது சமுத்திரத் திட்டம் குறித்து கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு சிக்கல்களைச் சிலர் உருவாக்கி வருகின்றனர். இப்போது புதியதாக மதத்தின் பெயரால் ஒரு சிக்கலைக் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்களுடைய நோக்கம் சேதுக் கால்வாய் வந்துவிடக்கூடாது என்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் பவளப்பாறைகள் என்றார்கள். இப்போது இராமர் பாலம் என்கிறார்கள்.
மன்னார் வளைகுடாவில் உள்ள நீளமான மணல் திட்டை அகழ்வுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் இந்து அமைப்புகள், கட்சிகள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக இந்து அமைப்புகள் லக்னோ உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்து, அகழ்வுப் பணியை நிறுத்தி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து விட்டது.
புராணங்கள், இதிகாசங்கள் கற்பனையானவை என்று தெரிந்திருந்தும் இராமர்பாலத்தைக் கட்டினார் என்பது வேடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் அறிவியல், புவியியல் ஆதாரங்கள் என்ன சொல்கின்றன? என்கிற கேள்வியைக் கடலியல் வல்லுநரும் ஐ.நா.வின் முன்னாள் ஆலோசகருமான மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது;
"ஆற்று முகத்துவாரத்தில் நீர்வாத்து குறைந்தகாலங்களில் திட்டுகள் ஏற்படுவதுண்டு. இது போன்று திட்டு ஆழம் குறைந்த கடலிலும் உருவாகின்றது. அந்த மாதிரியான ஒரு திட்டைத்தான் இராமர் பாலம் என்றும் மனிதன் கட்டினான் என்றும் கூறுகின்றனர். இந்தியாவையும் இலங்கையும் சந்திக்கும் மணல் திட்டுகள் தெற்கு, வடக்கு என இரண்டு இடத்தில் உள்ளன. தெற்கே உள்ள மணல் திட்டுகளை இராமர் கட்டினார் என்றால், வடக்கே உள்ள மணல் திட்டுகளை யார் கட்டியது?
ஆனாலும், இந்தச் சிக்கலை மேலோட்டமாகச் சொல்வது நன்றாக இருக்காது. அறிவியல் பூர்வமாகவும் புவியியல் அடிப்படையிலும் கூறினால் மட்டுமே மக்களுக்குப் புரியும்" என்றவர் மேலும் கூறியதாவது;
`சேது' என்பது வடமொழிச் சொல் என்று இதுவரை கூறிவருகின்றனர். அது முற்றிலும் தவறு. சங்க இலக்கியங்களான அகநானூறு 79-7, 394-6, நற்றிணை 213-4, 359-1, பெரும்பாணாற்றுப் படை 306 ஆகிய பாடல்களில் சேறு, மணல் ஆகியவை சேரும் இடத்தைச் சேது என்றும் அந்த மண்ணை ஆண்ட மன்னர்களையும் மக்களையும் சேர்வை என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே, சேது என்பது தமிழ்ச் சொல்லே.
இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு. இயற்கையாக மணல் சேருகின்ற தன்மையை அங்குள்ள மக்கள் சேர்வது என்று அழைத்து, பின்னர் சேது என்று அழைத்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு மணல்கள் சேர்வது, நீரும் நிலமும் கலக்கின்ற எல்லா இடங்களிலும் நிகழ்கின்ற இயல்பு. ஆற்றுநீரில் வண்டலாக சேறாக, மண்டியாக வருகின்ற மணல் நீரின் வேகத்தோடு ஓடிச் சென்றாலும் வேகம் குறைந்த ஓரங்களில் திடல்களாக அங்கு உருவாகும்.
நீர்வரத்துக் குறைந்த காலங்களில் உள்வளைவுகளிலும் சரிவுகளிலும் அருவியாகச் சொரியும் இடங்களின் முன்பு கடலோடு கலக்கின்ற நிலையிலும் மணல் சேர்ந்து திரண்டு, திரளாகி, திடலாகி, காட்சி தரும்.
ஆறுகளில் நீர்வரத்துக்குறைந்த காலங்களில் வெளி வளைவுகளில் நீரோட, உள் வளைவுகளில் மணல், சேறு திரண்டு திடல்களாகும். அதேபோல நீர்வரத்துக் குறைந்த காலங்களில் ஆற்றுமுகத்துவாரத்தில் மணல் சேர்ந்து திடலாகி இருக்கும்.
ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்தத் திடல்கள் கரைந்துவிடும். முகத்துவாரத்தில் வெளிப்பக்கத்தில் அகலமாகவும் நிலப்பகுதியில் கூம்பாகவும் இத்திடல் இருக்கும். மேடுகளுக்கும் செங்குத்தான பள்ளங்களுக்கும் உள்ள எல்லைகளில் இத்தகைய திடல்கள் அமைவது இயற்கை. இது ஒரு புவியியல் தன்மை, நீரியல் தன்மை மற்றும் சேற்றியல்தன்மை. இத்தகைய திடல் ஆற்றுமுகத்துவாரங்களிலும் தரவைக் கடல்களிலும் உருவாகின்றன. ஆழம் குறைந்த கடலே தரவைக் கடல் . ஆழம் அதிகமான கடல் நெடுங்கடல்.
நெடுங்கடலின் நடுவே நிலங்களை இணைக்கும் மேடைதரவைக் கடலாக அமைகின்ற புவியியல் தன்மையை உலகெங்கும் காணலாம். நீரிணை என இவற்றைப் பெயரிடுவர்.
சைபீரியா முனையையும் அலஸ்கா முனையையும் இணைப்பது பெரிங் நீரிணை.
தென் பாப்புவாவையும் வட அவுஸ்திரேலியாவையும் இணைப்பது டொரஸ் நீரிணை.
சுலவகாசி தீவையும் போணியோ தீவையும் இணைப்பது மக்காசா நீரிணை.
அரபுக்கடலின் நீட்டமான மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைப்பது பாக்கு நீரிணை.
நில இடுக்குகளைப் போல நீரிணைகளும் உலகெங்கும் உள்ளன. இந்த நீரிணை மேடை விளிம்புகளில் எல்லைகளில் நெடுங்கடலைச் சந்திக்கும் இடத்தில் மணல் திடல்கள் அமைவது இயல்பு. அது பெரிங், டொரஸ், மக்காசா நீரிணையாக இருந்தால் என்ன? பாக்கு நீரிணையாக இருந்தால் என்ன? ஆழமற்ற மேடை ஆழமான கடலைச் சந்திக்கும் விளிம்பில் திடல்கள் அமையும்.
ஆறு கடலில் கலக்கும் போதும் சரி, கடல் மேல்மட்ட நீரோட்டம் தரவைக் கடலிலிருந்து ஆழ்கடலில் விழும்போதும் சரி கிளைகள் விட்டு பாயும்.
கங்கை, பிரம்மபுத்திரை வங்கக்கடலில் கலக்கும் சுந்தரவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் மணல் திடல்களைச் சுற்றி வளைந்து வளைந்து செல்கின்றன. அக்கடலிலும் கண்ட மேடைகளிலும் நகரும் தீவுகளே இருக்கின்றன.
அதேபோல தரவைக் கடலின் மேல்மட்ட நீரோட்டம் விளிம்பில் வழிந்து ஆழ்கடலில் கலக்கும்போது நகரும் மணல் திடல்கள் அமைகின்றன.
பாக்கு நீரிணையின் தெற்கு எல்லையான தலைமன்னார், தனுஷ்கோடி விளிம்பில் நூற்றுக்கணக்கான நகரும் மணல் திடல்கள் அமைந்திருக்கின்றன.
இந்த நகரும் திடல் ஒரு நாளைக்கு ஓர் இடத்தில் இருக்கும். மறுநாள் வேறொரு இடத்தில் இருக்கும். நீரோட்டம், சேற்று வெள்ளம், சுழிநீரின் வண்டற் கலக்கல் அளவு போன்ற பல்வேறு காரணங்களினால் முக்கோண வடிவான இத்திடல்களே நகரும் திடல்கள் ஆகின்றன.
இதேபோல, பாக்குநீரிணையின் வட விளிம்பான 45 கி.மீ. நீளமுள்ள கோடியக்கரை மாதகல்நீள் படுக்கையில் நகரும் திடல்கள் அமைந்திருக்கின்றன. அங்கேயும் தரவைக் கடல்விளிம்புக்கு அப்பால் சடுகையான செங்குத்தான ஆழம் வங்காள விரிகுடாவில் உண்டு.
வங்காள விரிகுடாவும் அரபிக்கடலும் எதிர் எதிர் பருவ நிலைகளைக் கொண்ட பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய கடல்கள். இந்தியப் பெருங்கடலின் நீட்டங்களான இந்த இரு கடல்களில் எதிர் எதிர் பருவக் காற்றுகள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூர்மையடையும்.
கார்த்திகை, மார்கழி, தையில் வாடைக்காற்று வீசும். வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் வலசை நீரோட்டம் ஏற்படும். ஏறத்தாழ 3,000 மீற்றர்வரை ஆழமுள்ள கடல்களில் இந்த நீரோட்டத்தின் உந்துதல் நடு ஆழத்தில் கடுமையாக இருக்கும்.மேற்புறத்திலும் அடி ஆழத்திலும் நீரோட்ட உந்துதல் குறைவாக இருக்கும்.
கங்கையும் பிரம்மபுத்திரையும் ஐராவதியும் மகாநதியும் அடித்துத் தள்ளும் மலைச்சாரல், சேறும் மரமுறிவுகளும் குழைகளும் வங்கக் கடலில் கலந்து இந்த வலசை நீரோட்டத்துடன் இணைந்து சோழமண்டல கரை வழியாக மேற்பரப்பில் விரைந்து ஊர்ந்து பாக்கு நீரிணையை அடைந்து, இலங்கையின் மேற்குக்கரை வழியாக இந்துப் பெருங்கடலை நோக்கி வேகமாக மூன்று மாத காலங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும்.
மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் வலசை நீரோட்டத்தின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிவிடும். வங்கக்கடலானது குளம் போலவும் ஏரிபோலவும் மாறிவிடும். வைகாசி பிறந்தாலே எதிர் பருவமான இடசை நீரோட்டத்திற்கு அரபிக்கடலும் - வங்காள விரிகுடாவும் தயாராகி விடும். தென்றல் காற்று வீசும் காலம் தொடங்கும்.
ஆணி, ஆடி மாதங்களில் கிழக்கு ஆபிரிக்கக் கரையில் பிரியும் சோமாலி நீரோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு அரபிக் கடலில் கிளம்பும் இடசை நீரோட்டம் மன்னார் வளைகுடாவுக்கு புகுந்து பாக்குநீரிணை மேடைமேல் ஏறி கோடிக்கரை மாதகல் நீள்படுகையும் தாண்டிக் குதித்து வங்கக்கடலில் புகும்.
இலங்கையைச் சுற்றியும் அந்த நீரோட்டத்தின் பெரும் பகுதி நீர், வங்கக் கடலைக் கலக்கி சோழமண்டல கரை வழியாக மிதந்து ஊர்ந்து மியன்மாரைத் தொடும்.
இந்த எதிரெதிர் நீரோட்டங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழுமையடைந்து அரபிக்கடலையும் வங்கக் கடலையும் கலக்கி வண்டலையும் சேற்றையும் பாக்கு நீரிணையின் மேற் பரப்பும் நீரோட்டத்துடன் கொணர்ந்து சேறாக்கி தங்க வைப்பதால், பாக்கு நீரிணையின் முதல் நிலை உற்பத்தி பெருகுகிறது. அவற்றை நம்பி சிறுமீன்கள் வளர, அவற்றை நம்பி பெருமீன்கள் வளர, சங்குகளும் முத்துகளும் சிப்பிகளும் சிங்கி இறால்களும் பிறவும் பெருமளவில் வளர்கின்றன.
பாக்குநீரிணை தரவைக் கடலில் பரந்துபட்ட மீன் உற்பத்திக்கு இந்த எதிரெதிர் நீரோட்டம் மூலமாக வரும் சேறும் வண்டலும்தான் வளம் ஊட்டுகின்றன.
இந்த எதிரெதிர் நீரோட்டத்தினால் வரக்கூடிய சேறும் வண்டலும் பாக்கு நீரிணையின் வட,தென் விளிம்புகளில் படிந்து சேர்ந்து திரண்டு நகரும் மணல் திடல்கள் ஆகின்றன. இந்தத் திடல்களுள் தெற்கில் உள்ளதை இராமர் பாலம் என்று சொல்கிறார்கள்.
இயற்கையாக நடைபெறும் நிகழ்வினால் ஏற்படும் திட்டுகளை அல்லது திடல்களை மனிதன் கட்டினான் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்? என்று கேள்வியை எழுப்பினார் மறவன் புலவு க.சச்சிதானந்தன்.
அவரிடம் நீங்கள் சொல்வதுபோல் இயற்கையாக ஏற்பட்ட மணல் திடல்களாகவே இருந்தாலும், அந்த திடல்களை தகர்ப்பதால் `சுனாமி' மாதிரியான பேராபத்துகள் வரும்போது, பாக்கு நீரிணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளாரே என்ற போது..
இரண்டு மீற்றர் நீளமுள்ள ஒரு சுவரில் 2 செ.மீற்றர் விட்ட வட்டமுள்ள ஒருதுளையால் அந்த இரண்டு மீற்றர் சுவருக்கு பாதிப்பு வருமா? இந்த இரண்டு செ.மீ. விட்ட வட்டமுள்ள துளை இருந்தால் தானே மின்சார கம்பியினை உட்செலுத்தி மின் இணைப்பு ஏற்படுத்த முடியும். அதோபோலத்தான் 31 கி. மீற்றர் நீளமுள்ள தலைமன்னார் , தனுஷ்கோடி சேதுதிடல்கள் . அதிலே 300 மீற்றர் அகலமான அகழ்வுப் பணி நடைபெற இருக்கிறது.
மொத்தமாகப் பார்க்கும் போது ஒரு விழுக்காடு அளவு தான். இதே மாதிரி எத்தனையோ இடைவெளிகள். அந்த 31 கி.மீற்றர் சேது திடல்களில் உள்ளன. அதனால் பாதிப்பு என்பது துளியும் இருக்காது. 2 மீட்டர் நீள சுவரில் 2 செ.மீ. துளை ஏற்படுத்துவதால் எந்தப் பாதிப்பும் வராது.
ஏதோ முழுத் தொடரை சேது திடல்கள் இடிப்பது போல் அல்லவா கூச்சலிடுகிறார்கள்.31 கி.மீட்டர் . அதில் பாதியளவு இலங்கை எல்லைக்குள் இருக்கின்றது. அதில் ஒரு விழுக்காடு இடைவெளி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதில் எங்கிருந்து பாக்கு நீரிணைக்குப் பாதிப்பு வரப்போகிறது? கண்டிப்பாக வராது.
அடுத்ததாக, இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறார்கள். அகழ்வுப் பணியில் வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. அதனால் அங்கே இருக்கும் கற்பாறைகள், பவளப் பாறைகள் சிதறிப் போய்விடும். தோரியம், மக்னீசியம் போன்ற கனிமவளங்கள் அழிந்து போய் விடும் என்று சொல்கிறார்கள்.
சேது சமுத்திர திட்டத்திற்காக மண் அகழ்கின்ற பணியைச் செய்யும் இடத்தில் மணலே பெருமளவில் இருக்கிறது. 30 அல்லது 40 மீற்றருக்குக் கீழே சுண்ணக்கற்களுடைய புவியியல் அமைப்பு கொண்டவை என்று இந்தியா - இலங்கை ஆழ்கடல் ஆராய்ச்சி கூடங்கள் உறுதி செய்கின்றன. அதனால் அங்கே பாறைகள் உடையும் என்ற நிலையே இல்லை.
இன்னொன்றையும் சொல்கிறார்கள். விண்வெளி கலத்திலிருந்து இந்தியா கடல்வெளியை நாசா எடுத்த ஒளிப்படத்தில் தனுஷ்கோடி கரையிலிருந்து தலைமன்னார் வரை நீளும் திட்டுகள் மனிதனால் கட்டப்பட்ட பாலம் இருப்பதாகவும் அது இராமர் கட்டிய பாலம் என்று அந்த நாசா அமைப்பு கூறியுள்ளதாகவும் கூச்சலிடுகின்றனர்.
இவர்கள் ஏன் நாசாவிடம் போக வேண்டும். இஸ்ரோ அமைப்பு படம் பிடித்திருக்கின்றனர். அவர்கள் இப்படி ஒரு கருத்தை கூறவில்லையே. ஆழம் குறைந்த கடலில் மணற்திட்டு தொடர்ந்து இருப்பதையே விண்வெளிப் படம் காட்டும் . அதற்கு மேல் அதற்கு விளக்கம் தருபவர் புவியியல் கடலியலயாளரோ , நாசாவோ இஸ்ரோவோ இல்லை.
சேது கால்வாய் அமைவதன் மூலமாக இந்திய நாட்டிற்குப் பயன் கிடைக்கும் . குறிப்பாக தமிழக கடற்கரையோர மக்களுக்கு வளம் சேரும்.
152 ஆண்டுகளுக்கு முன்பு சூயஸ் கால்வாய் அமைந்த பொழுது இன்றைய திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்ற நேரடியாகக் கூறினார்களா?
90 ஆண்டுகளுக்கு முன்பு பனாமா கால்வாய் உருவாக்கப்பட்டது. அங்கே அதற்குப் பக்கத்தில் அதே அளவில் இன்னொரு கால்வாயை மக்கள் விரும்புகின்றனர். காரணம் புதிய கால்வாய் உருவாக்குவதன் மூலம் அந்நிய நாட்டு ச் செலாவணியை பெருக்கிக் கொள்ள முடிகிறதாம். அண்டை நாட்டில் சுமுகமான வணிக உறவுகளை ஏற்படுத்த முடிகிறதாம். அதனால், அங்குள்ள மக்கள் இதே போன்ற கால்வாய்த் திட்டத்தை விரும்புகின்றனர்.
ஆனால், 145 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கால்வாய் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். என்று கூறி வந்திருக்கிறோ

எல்லை கடந்து மீன் பிடிக்கலாம்

பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் எல்லை கடந்து மீன் பிடிக்கலாம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஐ. நா. முன்னாள் ஆலோசகர், கடலியலாளர்
்இந்திய மீனவர், எல்லையைத் தாண்டி இலங்கைக் கடல் எல்லைகளுள் மீன்பிடிப்பது முறையற்றதுதான். ஆனாலும் கடலுக்குப் புறப்படும் எந்த மீனவரும், மீன்வளம் எங்கிருக்கிறதோ அங்கேதானே போவார்! எனவே, இந்திய இலங்கை எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவரைத் தடுக்க முடியுமா? ப்படி அவர்கள் சென்றால் அவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுடலாமா? துப்பாக்கியால் சுடாதீர்கள், இந்திய மீனவர்களைக் கொல்லாதீர்கள் என இலங்கை அரசிடம் கூறியுள்ளோம். ஒத்துழைப்பதாக இலங்கை அரசும் உறுதி அளித்துள்ளது.’
இந்தக் கருத்துகளமைந்த செய்தியை இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் 31.5.2007 அன்று சென்னையில் கூறியுள்ளார்.ந்திய மீனவருக்கு இந்தக் கருத்துரை மகிழ்ச்சியைத் தரும். கரையை விட்டுக் கடலுக்குள் புறப்படும் மீனவர், எல்லைக் கோடுகளை அறிவாரா? கடலுக்குள் கற்பனையாக உள்ள எல்லைக் கோட்டினைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டா கடலில் தொழில் செய்கின்றனர் மீனவர்? ம். கே. நாராயணனின் கருத்துகள், மீனவரின் மெய்நிலையைத் தெளிவாக, உள்ளோட்டமாக எடுத்துக் கூறின.
பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் மீன் பிடிப்பவர்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்கின்ற தமிழ் மீனவர்களே. மன்னார் வளை குடாவின் தென் பகுதிக்கு இலங்கையின் நீர்கொழும்பில் வாழும் பரதவரான தமிழ்பேசும் சிங்கள மீனவரும் வருவதுண்டு.
பாக்கு நீரிணையில் 10,000 சதுர கிமீ. பரப்பளவும் மன்னார் வளைகுடாவில் 20,000 சதுர கிமீ. பரப்பளவும் ஆக, மொத்தம் தோராயமாக 30,000 சதுர கிமீ. பரப்பளவுக் கடலின் உயிரின வளத்தை இந்த இரு கரைகளிலும் வாழும் மீனவர் தேடுகின்றனர்.லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அனைத்துலக எல்லைக்கோடு உண்டு. இந்தக் கோட்டினை 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் சிறீமாவும் ஒப்பமிட்ட உடன்பாட்டில் வரையறுத்தனர்.ந்த எல்லைக் கோடு, வங்காள விரிகுடாவும் பாக்கு நீரிணையும் சந்திக்கும் கடலில் (110 26’ வடக்கு 830 22’ கிழக்கு) தொடங்கி, தென்மேற்காக வளைவுகளுடன் 275 கிமீ. வரை நீண்டு, மன்னார் வளை குடாவும் அரபிக் கடலும் சந்திக்கும் கடலில் (050 00’ வடக்கு 770 10.6’ கிழக்கு) முடிவடைகிறது.ந்தக் கோட்டுக்கு வெளியே அனைத்துலக உடன்பாடுகளுக்கு அமைய இந்தியப் பொருளாதார வலயமும் இலங்கைப் பொருளாதார வலயமும் அவ்வவ் நாட்டு எல்லைகளாக விரிகின்றன.மிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து கன்னியாகுமரி வரை நீள்கின்ற கடற்கரை தோராயமாக 750 கீமீ. ஆகும். இலங்கையின் பருத்தித்துறையிலிருந்து சிலாபம் வரை நீள்கின்ற கடற்கரையும் தோராயமாக 700 கிமீ. ஆகும்.ந்த இரு கடல்களை ஒட்டிய தமிழகக் கடலோரத்தில் தோராயமாக 450,000 மீனவரும், இலங்கையை ஒட்டிய கடலோரத்தில் தோராயமாக 200,000 மீனவரும் வாழ்கின்றனர்.ந்த இரு கடல்களின் தமிழகக் கரையோர மீனவர் ஆண்டுக்கு தோராயமாக 300,000 மெட்றிக் தொன் கடல் உயிரினங்களையும், இலங்கை மீனவர் ஆண்டுக்குகுத் தோராயமாக 200,000 மெட்றிக் தொன் கடல் உயிரினங்களைக் கரை சேர்க்கின்றனர்.
,000 சதுர கிமீ. பரப்பளவுக் கடலில் 650,000 மீனவர் 500,000 மெட்றிக் தொன் கடல் உயிரின வளங்களைக் கரை சேர்க்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 1 சதுர கிமீ. பரப்பளவுக் கடலில் தோராயமாக 18 - 20 மெட்றிக் தொன் மீன் பிடிபடுகிறது. ஆண்டொன்றுக்கு ஒரு மீனவர் 0.75 - 1 மெட்றிக் தொன் கடல் உயிரினத்தைப் பிடித்து வருகிறார்.
மேற்கூறிய தோராயப் புள்ளி விவரங்கள் சமகால நிகழ்வுகளின் பிரதிபலிப்பு ஆகும். மீன் வளம் எங்கிருக்கிறதோ, மீனவர் நாட்டு எல்லையைத் தாண்டித் தேடலாம், பிடித்து வரலாம் என்ற எம். கே. நாராயணனின் கருத்து, இந்திய அரசின் கருத்தாகும். இந்த இருகடல்களின் இரு கரைகளிலும் வாழும் தமிழ் மீனவர் பெரிதும் வரவேற்பர். காலாதி காலமாக இந்த இரு கடல்களின் இரு கரைகளிலும் வாழும் தமிழ் மீனவர் கடலுக்குத் தொழிலுக்கு வந்தால், தமக்குள்ளே ஆகக் குறைந்த சச்சரவுகளையும் ஆகக் கூடிய ஒத்துழைப்பைகளையும் வழங்கிக் கடலில் மீன் பிடித்தனர். எம். கே. நாராயணனின் இந்தக் கருத்து, காலாதி கால உறவையும் தொடர்பையும் வலியுறுத்தும் கருத்து. ந்த சில ஆண்டுகளாகப் பறவைகளைச் சுடுவதுபோல் அக்கடல்களில் தமிழரைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவும் இக்கருத்து அமையும். கச்ச தீவு யாருக்குச் சொந்தம் என்ற வினாவையும் பொருளற்றதாக்கிவிடும். இந்தக் கருத்து 1974இன் இந்திய இலங்கை உடன்பாட்டின் மீன்பிடி தொடர்பான விதிகளையும் பொருளற்றதாக்கிவிடும்.ந்திய மீனவர் இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பர், பாதுகாப்பாகத் தமிழகம் திரும்புவர். இலங்கை மீனவரும் இந்தியக் கடல் எல்லைக்குள் செல்வர், மீன் பிடிப்பர் பாதுகாப்பாகத் திரும்புவர். இந்தியா அரசின் கருத்துக்கமைய இனிமேல் அவை பாரிய சட்ட மீறல்கள் ஆகா.லின் பரப்பளவு மாறாமல் இருக்கிறது. கடலின் உயிரின மொத்த உற்பத்தி மாறாமல் இருக்கிறது. இருகரைகளிலும் வாழ்கின்ற மீனவர் தொகை கடந்த 50 ஆண்டுகளில் மும்மடங்காகப் பெருகி உள்ளது. கட்டுமரங்கள் பல விசைப் படகுகளாயின. இழுவைப் படகுகள் புகுந்தன. நைலோன் வலைகளும் இழுவை வலைகளும் பெருகின. இதனால் மீன்பிடி அளவு வேகமாக உயர்ந்தது.
முதனிலை உற்பத்தியும் அதைத் தொடரும் விலங்கின உயிர்ப் பெருக்கமும் மொத்தக் கடல் உயிரின உற்பத்திக்குள் உள்வரவுகள். மீன் பிடித்தல் மொத்த உற்பத்தியின் வெளியேற்றம். உள்வரவும் வெளியேற்றமும் சம அளவாக இருந்தால் உற்பத்திச் சமன்பாடு இருக்கும். வெளியேற்றம் கூடுதாக இருந்தால், அதுவும் ஆண்டு தோறும் இந்த வெளியேற்றம் கூடுதலாகித் தொடருமானால் இந்த இரு கடல்களின் வளம் குன்றும். ஈற்றில் உயிரின வளமற்ற பாலையாகக் கடல் மாறும்.ல் வளத்தைப் பேணவும் நாடுகடந்த மீனவரின் உரிமையைக் காக்கவும், எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கலாம் என்ற முறைமை உலகெங்கும் வழக்கிலுள்ள ஒன்றாகும். யப்பானும் கொரியாவும் தமக்கு இடையிலுள்ள கடலில் இருநாட்டு மீனவரும் மீன்பிடிக்க ஏற்பாடு செய்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து, ருசியா ஆகிய நாடுகள் தமக்குப் பொதுவான கடலில் தத்தம் நாட்டு மீனவர் அனைவரும் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்கும் உரிமங்களை வழங்கியுள்ளன. இத்தகைய உடன்பாடுகள் கூட்டு ஆணையங்களாகி உலகெங்கும் மீனவருக்கும் கடல் வளப் பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன.
,000 சதுர கிமீ. பரப்பளவு கொண்ட இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிட்ட கடலில், இருநாட்டு மீனவரும் கடலின் எப்பகுதியிலும் மீன்பிடிக்க எம். கே. நாராயணின் கருத்துரை தொடக்கமாக அமைந்துள்ளது.ல்லைக் கோட்டில் ஓளிரும் மிதவைகள் அமைத்து அவரவர் கடலுக்குள் அவ்வவ் நாட்டு மீனவரை முடக்குவதை ஒரு வழியாகக் கொள்ளலாம்.
வரையறை செய்த கடல் எல்லை ஒருபுறமிருக்க, மீன்பிடி உரிமத்தை இரு நாட்டவருக்கும் கடல் முழுவதும் பொதுவானதாக்கும் முறையை மற்றொரு வழியாக்கலாம். இதற்கான படிமுறை நிலைகள் பின்வருமாறு அமையும்.
\மன்பாட்டு மீன்பிடி அளவை முதலில் தீர்மானிக்க வேண்டும்.
மீனவர் தொகைக்கேற்ப, இருநாட்டவருக்கும் அந்தச் சமன்பாட்டு மீன்பிடி அளவில் எந்தெந்த மீன் வகைகளில் எவ்வெவ்வளவு பங்கு என்பதைத் தீர்மானிக்க வேண்டும். யிரின இனப்பெருக்கக் காலத்தில் மீன்பிடித் தடை இரு நாடுகளுக்கும் பொதுவாகவேண்டும்.றிப்பிட்ட இறங்கு துறைகளில் மட்டுமே மீன்பிடியைக் கரை சேர்க்க வேண்டும்.ந்த இறங்கு துறைகளில் கரைசேரும் மீன்பிடி அளவுகளை நாள்தொறும் குறிக்க வேண்டும்.ரு கரைகளிலுமுள்ள இறங்கு துறைகளில் கரை சேரும் மீன்களின் மொத்த அளவு எந்தெந்த மாதத்துக்கு எந்தெந்த வகைக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அந்த அளவை எட்டியதும் மீனவருக்கு அறிவித்து மீன்பிடியை நிறுத்த வேண்டும்.றங்கு துறைகளில் கண்காணிப்புக் கூட்டாக நடைமுறையில் இருக்கும்.ந்த நடைமுறைகளுக்காக இரு கரைகளில் உள்ள மீனவர்களின் அரசுகள் கூடி, ஓர் ஆணையத்தை நிறுவி, இந்த 30,000 சதுரப் பரப்பளவுக் கடலின் மீன்பிடியைக் கண்காணிக்க வேண்டும். மீனவரின் தொழிற் பரப்பெல்லை கட்டுப்பாடின்றி இருக்க அனைத்துலக வழிகாட்டல்களும் எடுத்துக்காட்டுகளும் இந்தப் படிமுறை நிலைகளைச் சார்ந்தன.
மீனவர்களின் உணர்வைப் பிரதிபலிக்கின்ற, இரு நாட்டு மீனவரும் அன்னியோன்னியமாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவுடன் மீன்பிடிப்பதற்கான அடித்தளமாக அமையும் ஓர் ஆணையத் தொடக்கத்துக்கான அடிக்கல்லை எம். கே. நாராயணன் இந்திய அரசின் சார்பில் 31.5.2007அன்று சென்னையில் நாட்டியுள்ளார். ரு நாட்டுச் சட்டங்களையும் மீறும் செயல்களுக்காக அவ்வவ் நாட்டுக் கடற்படைகள் தேவைப்படுமேயன்றி மீனவரைப் பாதுகாக்கவோ அவர்களின் பயணங்களைக் கண்காணிக்கவோ கடற்டைகள் தேவைப் படா. இத்தகைய கூட்டு ஆணையத்தின் முகாமையில் இக்கடற்பரப்பு வருமாயின் கடற்படைகளுக்கு அங்கு பணியே இருக்காது. தமிழர் எவரும் அக்கடலில் கொலைசெய்யப்படார். இந்திய இலங்கைத் தமிழ் மீனவரின் வளமான எதிர்காலம் இத்தகைய கூட்டு ஆணையக் கட்டமைப்பில் அமைதலே பொருந்தும்.

Tuesday, October 25, 2005

நிலநடுக்கம் - ஆழிப்பேரலை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறிவதற்குரிய தொழில் நுட்பம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையே!
ஆனாலும் ஆழிப் பேரலை வரக்கூடும் என எச்சரிக்கும் தொழில் நுட்பம் வந்துவிட்டது! பல நாடுகள் இந்தத் தொழில் நுட்பத்தால் பயனடைந்து வருகின்றன.
ஆழிப் பேரலைகள் தமிழகத்தையும் தமிழீழத்தையும் தாக்குவது இதுதான் முதலாவது முறை அல்ல. வரலாற்றில் முறையாகப் பதிவு செய்த ஆழிப்பேரலைகள், திபி 1912 (1881)இலும், திபி 1972 (1941)இலும் தமிழகத்தைத் தழுவியுள. அதற்கு முன்னரும் தமிழகக் கரைகளை ஆழிப்பேரலைகள் பலமுறை தழுவியிருக்கலாம்.
மாமல்லபுரக் கோயில்கள் கடலுக்குள் சென்றுவிட்டன. பூம்புகாரை 1,800 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழிப்பேரலை விழுங்கிய செய்தியை,
அணிநகர் தன்னை அலைகடல் கொள்க, என
இட்டனள் சாபம், பட்டது இதுவால்,
கடவுள் மாநகர் கடல்கொளப்; பெயர்ந்த
வடிவேல் தடக்கை வானவன் போல,
விரிதிரை வந்து வியநகர் விழுங்க
ஒருதனி போயினன் உலக மன்னவன்.
வரி 199-204, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
மணிமேகலைக் காப்பியத்தில் காணலாம்.
கடல் தரையில் நிகழும் நிலநடுக்கங்களும் எரிமலைகளும் ஆழிப் பேரலைகளை எழுப்புகின்றன.
புவியின் அமைப்பே நிலநடுக்கத்துக்கும் எரிமலைகளுக்கும் காரணம். உருண்டையான புவியின் நடுவே கூழாகத் திரண்ட எரிதழல் குழம்பு உள்ளது. இந்த வெப்பக் குழம்பை மூடி, 100 கிமீ அளவிலான தடித்த கோது உள்ளது.
16 பெரிய தகடுகள் இணைந்ததே இந்தக் கோது. இப் பெரிய கண்டத் தகடுகளை ஒட்டிச் சிறு சிறு தகடுகளும் உள்ளன.
தன்னைத் தானே சுற்றுவதுடன், சூரியனையும் சுற்றி வருவது பூமி. பாரிய இந்த அசைவுகளால் தகடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் எல்லைகளில், உராய்வுகள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த உராய்வுகளால் சில இடங்கள் பிளவுறும், சில இடங்கள் குவியும். இதனால் கண்டங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்த உராய்வுகளே நிலநடுக்கங்களின் அடிப்படைக் காரணி.
இந்தியத் துணைக்கண்டமும் சுற்றியுள்ள கடலும் இத்தகைய ஒரு கண்டத் தகட்டின் மேல் உள்ள பகுதியே. இந்தத் தகட்டின் பெயர் இந்தியத் தகடு.
இந்தியத் தகட்டுக்குக் கிழக்கே சுந்தரத் தகடு உள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே சிறிய தகடு ஓன்று உண்டு. பர்மாக் குறுந்தகடு எனப் பெயர் கொண்ட அத் தட்டின் மேல் அந்தமான் நக்காவரத் தீவுக் கூட்டமும் சுற்றியுள்ள கடலும் உள்ளன.
இந்த பர்மாக் குறுந்தகட்டின் ஓரங்களும் பஇ தகடுகளின் ஓரங்களைப் போல எப்பொழுதும் உராய்ந்து கொண்டும் குவிந்துகொண்டும் இருக்கின்றன. இதனால் நிலம் எப்பொழுதும் நடுங்கிக் கொண்டே இருக்கிறது.
பல நடுக்கங்கள் நம் புலனுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் கருவிகள் அவற்றைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றில் இத்தகைய் பதிவு கருவிகள் உள. இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறையினர் 58 மையங்களில் இக்ருவிகளைப் பொருத்தி உள்ளனர். இவை தவிர இந்திய புவியியல் கழகத்தினரும் இத்தகைய பதிவு மையங்களை வைத்திருக்கின்றனர்.
உலகில் எங்கு நிலநடுக்கம் ஏற்படினும் எந்தக் கருவியிலும் அது பதிவாகும். பூமியில் எந்தப் பகுதியில் எந்த அளவில் நிலநடுக்கம் வந்துளது என்பதும் பதிவாகும்.
26.12.2004 ஞாயிறு காலை, ஆழிப் பேரலையைத் தட்டி எழுப்பிய நிலநடுக்கமும் இந்தியக் கருவிகளில் பதிவாயின. உலக நாடுகளில் உள்ள ஏனைய பல கருவிகளிலும் பதிவாகின. இந்திய எல்லைக்கு அப்பால் இந்த நிலநடுக்க மையம் இருந்ததால், இந்தியப் பதிவாளர் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை.
கண்டத் தகடு ஒன்று மற்றதுடன் உராய்ந்து, சிறிய தகடு பெரிய தகட்டிற்குக் கீழாகச் சிறிதே நகர்ந்ததால், அதுவும் கடலுக்கடியில் இந்த நகர்வு நிகழ்ந்ததால், தகடுகளுக்கு மேலேயுள்ள நீர் திடீரெனத் தடுமாறியது, நிலை மாறியது.
குளத்துள் வீழ்ந்த பாறாங்கல் எற்படுத்தும் கலக்கம், பாரிய அளவில் கடலுள் ஏற்பட்டது. கண்டத் தகட்டின் சாய்வு ஏற்படுத்திய வெற்றிடம், நீர்த் தொகுப்பின் வழமையைக் குலைத்தது. ஆழிப் பேரலையைத் தோற்றுவித்தது.
சென்னையின் தென்கிழக்கே 2028 கிமீ. தொலைவில் சுமத்திராத் தீவின் வடமுனை உள்ளது. இந்த வடமுனையின் மேற்கோரமாக, பர்மாக் குறுந் தகட்டின் எல்லை செல்கிறது. (வரைபடம் பார்க்க)
இந்தப் பர்மாக் குறுந்தகடு அசைவதற்கு முன்பு, தென் பசிபிக் கடலின் தட்டுகள் அசைந்தன. 21.12.2004 தொடக்கம் 24.12.2004 வரை பதிவான நிலநடுக்கத் தொடர்கள் (பட்டியல் பார்க்க) 26.12.2004இன் நிலநடுக்கத்தைத் தூண்டின போலும்.
26.12 ஞாயிறு அன்றும் ஒரே ஒரு நிலநடுக்கம் மட்டும் நிகழவில்லை. காலை முதல் மாலை வரை அடுக்கடுக்காக நிலம் நடுங்கியது (பட்டியல் பார்க்க). பர்மாக் குறுந்தகடு அசைந்துகொண்டே இருந்தது.
ஆனால் அந்த அசைவுகள் ஆழிப் பேரலையை எழுப்பவில்லை. கடலில் சிறிய தாக்கத்தை அவை ஏற்படுத்தி இருக்கும். நமக்குப் புலனாகவில்லை. சிறிய கடலலை அசைவுகளையும் நுணுகிக் கண்டறியும் கருவிகள் உள.
ஆழிப்பேரலைகள் கடலில் தோன்றிப் பயணிக்கின்றனவா என்பதை முன்கூட்டியே கண்டறிய, அமெரிக்க மாநிலமான ஹவாய்த் தீவில் ஓர் ஆய்வு மையம் உளது. பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 26 நாடுகளின் கூட்டமைப்பு இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. ஆழிப் பேரலை தோன்றிப் பயணிக்கும் போதே இந்த மையம் எச்சரிக்கை அறிவிப்பை இந்த 26 நாடுகளுக்கும் அனுப்புகிறது.
கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு கருவி நீரின் அழுத்த வேறுபாடுகளைக் கண்டறியும். ஆழிப் பேரலைக்குரிய குறி காணப்படின், கடற்பரப்பில் மிதக்கும் கருவிக்குச் செய்தி அனுப்பும். மிதவைக் கருவியில் இருந்து வானொலி அலைகள் செய்மதி மூலம் ஹவாய் மையத்துக்குச் செய்தியை அனுப்பும். (படங்கள் பார்க்க)
உடனே பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்குச் செய்தி பரவும். தானாகவே எச்சரிக்கை மணியும் சங்கும் ஊதும் ஒலிபரப்பிகள் உள்ளிட்ட ஆபத்து எச்சரிக்கைகள் கரையோரமெங்கும் மக்களைத் தட்டியெழுப்புகின்றன. அந்த நாடுகளில் உயிர்ச் சேதம் முற்று முழுதாகத் தவிர்க்கப்படுகிறது. முக்கிய ஆவணங்கள், பொருள்கள், ஆபத்துத் தரும் இரசாயனப் பொருள்கள், அணுக் கதிர்க்கழிவுகள் யாவையும் உடன் அப்புறப்படுத்த இந்த எச்சரிக்கை மிகவும் பயன்படுகிறது.
தாய்லாந்து நாட்டின் கிழக்குக் கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி, இந்த எச்சரிக்கை வசதி உண்டு. ஆனால் இந்துப் பெருங்கடலை ஒட்டி இந்த எச்சரிக்கை அறிவிப்பு வசதிகள் இல்லை. எனவேதான் தாய்லாந்திடம் என்ன உதவி வேண்டும் என அமெரிக்கா கேட்டபோது, யாம் கேட்பவை பொன்னும் பொருளுமல்ல போகமுமல்ல - நின்பால், இரப்பது ஆழிப்பேரலை கண்டறியும் தொழில்நுட்ப அறிவும் கருவிகளுமே எனத் தாய்லாந்து பதில் கூறியுள்ளது.
இந்துப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை அமைப்பின் தேவையை 26.12.2004இன் ஆழிப் பேரலை எடுத்துக்கூறியுள்ளது. அந்தத் தேவையை உணர இந்த நாடுகள் கொடுத்த விலை 160,000 உயிர்கள். அவற்றுள, 50,000 உயிர்கள் தமிழருடையன. உயிர்கள் மட்டுமல்ல, உடமைகளும் பெருமளவு அழிந்தன, தமிழரின் கடல் வலிமையுமல்லவா தளர்ச்சி கண்டது?
இயற்கைக்கும் நமக்கும் இடையே இசைவான இணக்கம் வேண்டும். அகழ்வாரைத் தாங்கும் நிலம்தான் எனினும், அதற்காக எல்லைகளை மீறுவதா? சுற்றுச் சூழல் மீதான கவனத்தையும் இந்த ஆழிப் பேரலை நமக்குச் சொல்லாமல் சொல்லிச் சென்றுளதே!





பட்டியல் 1
நாள் நிகழ்வு
19.12.2004 தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, பிஜிப் பகுதி, பிலிப்பைன்ஸ் பகுதி, என பசிபிக் பெருங் கடல் கரையோரமெங்கும்.
20.12.2004 அத்திலாந்திக் கடல், பசிபிக் பெருங்கடல் பகுதிகள்.
21.12.2004 பசிபிக் கடலைச்சுற்றிய பகுதிகள்
22.12.2004 கிழக்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகள்
23.12.2004 வட பசிபிக் கெருங்கடல் பகுதிகள்.
24.12.2004 இந்தோனீசியாவின் சாவகம், மேற்குப் பசிபிக் பெருங்கடல் பகுதிகள்.


பட்டியல் 2
26.12.2004
நேரம் இறிக்ரர் அளவு இடம்
06.28 8.9 சுமத்திரா அருகே
07.18 5.9 வட சுமத்திரா
07.45 5.8 அந்தமான தீவுகள்
07.52 6.0 நக்காவரம் தீவுகள்
08.04 5.8 வட சுமத்திரா
08.06 5.8 அந்தமான் தீவு
08.21 6.0 அந்தமான் தீவு
08.29 5.9 வட சுமாத்திரா
08.38 6.1 அந்தமான் தீவுகள்
09.51 7.3 நக்காவரம் தீவுகள்
11.52 5.7 அந்தமான் தீவுகள்
12.37 5.7 அந்தமான் தீவுகள்
13.08 5.8 அந்தமான் தீவுகள்
14.50 6.5 நக்காவரம் தீவுகள்
15.49 6.2 அந்தமான் தீவுகள்
16.35 6.3 அந்தமான் தீவுகள்

இப்பட்டியலில் உள்ள தகவல்கள் அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் புவியியல் ஆய்வகம், அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் தேசிய கடலியல் துறை ஆகியனவற்றின் மின்னம்பல தளங்களில் திரட்டியன

Monday, October 03, 2005

பவளப் பாறைகளை வளர்க்கலாம்,

மறவன்புலவு க. சச்சிதானந்தன், (ஐ.நா. முன்னாள் ஆலோசகர்)
பூஞ்சணவன், காளான், வைரசு, கிருமி, அமீபா என்பன விலங்கு உயிர்க் கூர்ப்பின் தொடக்க நிலைகள்.
குடலிகள் அடுத்த நிலை. பவளக் குடலி, சொறிமீன் குடலி என்பன விலங்கு உயிர்க் கூர்ப்பின் இரண்டாவது நிலை. உயிர்க்கலங்கள் சேர்ந்து, உணவைச் செரிக்கும் குடலுறுப்பும், தசை, கூடு போன்ற பாதுகாப்பு உறுப்பும், இனப்பெருக்க உறுப்பும் சேர்ந்து, விலங்குக் கூர்ப்பில் இரண்டாவது நிலையாகப் பவளக் குடலிகள் கொண்ட விலங்குக் குடும்பம் எழுந்தது.
குடலிகள் தம்மைச் சுற்றிப் பாதுகாக்கச் சுண்ண உப்புகளால் அமைக்கும் கூடுகளே பவளங்கள். இப்பவளக் குடலிகள் தனியன்களாகவோ, கூட்டுத் தொகுதிகளாகவோ வாழ்கின்றன. கூட்டுத் தொகுதிகளாக, ஒன்றன்மேல் ஒன்றாக, அடுக்கடுக்காகக் குடலிகள் சேர்ந்து அமைக்கும் தொடர்ச்சியான சுண்ணக் கூடுகளே பவளப் பாறைகள்.
பூனை சார் விலங்குகள் ஒரே வகைக் குடும்பமாக இருப்பினும், சிறுத்தை, புலி, பூனை, சிங்கம் எனப் பல்வேறு இனங்களாக இருப்பதுபோல, பவளக்குடலிகள் ஒரே வகைக் குடும்பமாக இருப்பினும் பல்வேறு இனங்களாக இருக்கின்றன. இதனாலன்றோ, கடற்கரையில் நம் கண்ணுக்குத் தெரியும் பவளக் குடலிக் கூடுகள் பல்வேறு வண்ணத்தினதாக, வடிவினதாக, அளவினதாக இருக்கின்றன.
உவர் நீரில் பவளக் குடலிகள் வாழ்கின்றன, வளர்கின்றன.
கடற்கரையோரங்களிலும், கடனீரேரிகளிலும், களப்புகளிலும், ஆற்றுமுகத்துவாரங்களிலும் நீரின் உவர்மை அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். நெடுங்கடலுள் நீரின் உவர்மை மாறாது (3.5%) நீடிக்கும். மழை தொடர்ந்து பெய்யாவிட்டால், நெடுங்கடலின் நிலையான உவர்மையின் அளவும் அதிரிக்கும், நீர்மை குன்றிவிடும் என்கிறார் வள்ளுவர் (குறள் 17) கரையோரக் கடல் எனாது, நெடுங்கடல் என வள்ளுவர் குறிப்பிட்டுக் கூறியதைக் கவனிக்க.
சிறப்பாக, பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய உலர்வலயத்தில், கடற்கரை ஓரங்களின் உவர்மையின் அளவு ஏறும், இறங்கும். இந்த உலர் வலயக் கரையோரக் கடல்களே பவளக் குடலிகளின் நெருக்கமான வாழ்விடங்கள். 50 மீ. ஆழத்துக்குக் கீழே பவளக் குடலிகள் வாழமாட்டா; வெளிச்சம் நிறைந்த சூழல் இவற்றுக்குத் தேவை; 18 பாகை செல்சியசுக்குக் கீழே உள்ள குளிர்மையைப் பவளக் குடலிகள் ஏற்று வாழமாட்டா.
கடலில் எப்பொழுதும் ஏதோ ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கும். நாள்தோறும் வெள்ளமும் வற்றும் மாறிமாறி வரும்; பருவ நீரோட்டங்கள் இருக்கும். இந்த நீரோட்டங்கள் பவளக் குடலிகளுக்குச் சாதகமாகவும் அமைகின்றன, பாதகமாகவும் அமைகின்றன.
நிலையாக ஒட்டியிருக்கும் குடலிகளுக்கு மெல்லிய நீரோட்டத்தில் மிதந்து வரும் தாவர மற்றும் விலங்கு நுண்ணுயிர்களே முக்கிய உணவாகின்றன.
பவளக் குடலிகள் தம் இனப்பெருக்க உயிரணுக்களை நீரில் மிதக்க விடுகின்றன. நீரின் மேற்பரப்பில் அவை கருக்கட்டுகின்றன. வளரும் கருக்களைப் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வன நீரோட்டங்களே. பவளக் குடலிகள் ஒரே இடத்தில் வளராமல் புலம் பெயர்ந்து பல்லிட விலங்குகளாக வளர நீரோட்டம் உதவுகிறது.
கருக்கட்டிய முட்டை மேற்பரப்பிலிருந்து கீழே இறங்கி வளர்வதற்கு ஒட்டிடம் தேவை. ஒட்டிடம் ஒன்றுடன் தன்னைப் பொருத்திக் கொள்ளும் பவளக் குடலியின் குடம்பி, தன்னைச் சுற்றிச் சுண்ணக் கூட்டைக் கட்டத் தொடங்குகிறது; முதிர்ந்து வளர்கிறது. நீரோட்டம் வேகமாக உள்ள பகுதிகளில் ஒட்டிடம் அமைந்தால், ஒட்டு விடுபடக்கூடிய வாய்ப்பும், கட்டமைப்புக் குலையும் வாய்ப்புமே அதிகம். சிறப்பாக, தொகுதிகளாக, சுண்ணப் பாறைகளைக் கட்டும் பவளக் குடலிகளுக்கு ஓரளவு நீரோட்டம் போதும். கடும் நீரோட்டத்தை அவை தாங்கா. எனவே நீரோட்டம் குறைந்த ஒதுக்கிடங்கள் சுண்ணப் பாறைகளைக் கட்டியமைக்கப் பவளக்குடலிகளுக்கு ஏற்ற ஒட்டிடங்களாகின்றன.
சேதுக் கால்வாயில் பவளப் பாறைகளை இந்தப் பின்னணியில் பார்க்கவேண்டும்.
வடக்கே கோடிக் கரையை ஒட்டிய கடலிலிருந்து, தெற்கே சேது அணை வரை சேதுக் கால்வாய் அமைய உள்ளது. ஏறத்தாழ 160 கிமீ. வரை நீளும் இக்கால்வாயின் ஆழம் 12 மீ., அகலம் 300 மீ.
கோடிக் கரையை ஒட்டி 54 கிமீ. நீளத்திற்கும் சேது அணையில் 20 கிமீ. நீளத்திற்கும் உள்ள பகுதிகளில் 3 மீ. - 7 மீ. ஆழமான திடல்கள் உள்ளதால் அந்தப் பகுதிகளில் 300 மீ. அகலத்துக்கு 12 மீ. வரை ஆழமாக்க உளர்.
வங்காள விரிகுடாவின் நீரோட்டம் வடகடலான பாக்கு நீரிணைக்குள் புகுவதும் வெளியேறுவதும் வழமை. இந்த நீரோட்டமே வடகடலின் தரையை மணற்பாங்காக வைத்திருக்கிறது. வடகடலின் தரையில், சிறப்பாக, கால்வாய் அமையவுள்ள 160 கிமீ. நீளத்துக்கும் கடல் தரை முழுவதும் சேற்று மணலாக, கிளிஞ்சல்கள் புதைந்த மணலாகவே உளது. கடற்பரப்பிலிருந்து 17 மீ. வரை ஆழத்துக்கு வடகடலின் தரையில் கற்பாறைகளோ சுண்ணப்பாறைகளோ இல்லை.
வடகடலின் தரையெங்கும் பவளக் குடலிகள் ஆங்காங்கே உள. அந்தப் பவளக் குடலிகள் சேதுக்கால்வாய் அமையவுள்ள 160 கிமீ. நீளத்திற்குத் தரையில் சுண்ணப் பாறைகளாக, பவளப் பாறைத் தொகுப்புகளாக இல்லை.
வடகடலின் கிழக்குக் கரையோரத்திலுள்ள ஒதுக்குப்புறக் கடற்கரைகளில் பவளப்பாறைத் தொகுப்புகள் உள. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகரையில் வல்வெட்டித்துறை தொடக்கம் சேந்தன்குளம் வரை உள்ள கடற்கரை நீளமெங்கும் சுண்ணப் பாறைகள் உள. இந்தப் பகுதி, இடசை நீரோட்ட கால ஒதுக்கு கடலாக உள்ளதால் பவளப் பாறைகள் நெருக்கமாக உள.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களின் மேற்குக் கரையோரங்களிலும் சார்ந்த பல தீவுகளின் கரையோரங்களிலும் பவளப் பாறைத் தொகுப்புகள் உள. இடசை மற்றும் வலசை நீரோட்டங்களுக்கு ஒதுங்கு கடலாக இப்பகுதி உளதே இதற்குக் காரணம்.
வடகடலான பாக்கு நீரிணையின் தமிழகக் கரையோரத்தில் தனுஷ்கோடி முனையில் மட்டுமே பவளப்பாறைத் தொகுப்புகள் உள. கோடியக் கரையில் இருந்து, சேது அணை வரை நீளும் தமிழகக் கரையில் தனுஷ்கோடி முனை தவிர வேறு எந்தப் பகுதியிலும் எப் பவளக்குடலிகளும் சுண்ணப் பாறைகளை அமைக்கவில்லை.
வங்காள விரிகுடாவின் இடசை மற்றும் வலசை நீரோட்டங்களின் வீச்சை எதிர்கொள்ளும் கரைகளாக வடகடலின் தமிழகக் கரை இருப்பதால் அந்த வீச்சின் ஓட்டத்தைத் தாங்கியவாறு பவளக் குடலிகள் ஒட்டிவாழ முடியாததால், சுண்ணக்கூட்டுத் தொகுப்புகளை அமைக்கும் வலுவற்றதால், அங்கு பவளப் பாறைகள் இல்லை.
ஆனாலும் வடகடல் தரையில் தனியனான பவளக்குடலிகள் பல்வேறு வகையின, பல்வேறு வடிவின, பல்வேறு அளவின, அழகிதாய் செவ்விதாய் இயற்கையின் இன்பப் பூக்களாய் சொரிந்து தரையெங்கும் தனியன்களாய்ப் பரந்து கிடக்கின்றன.
சேதுக் கால்வாயை ஆழமாக்கும் இடங்களில் இவை இருக்கலாம், அகழ்மண்ணுடன் இவை வேறிடங்களில் குவியலாம். அகன்ற தரைப் பரப்பின் 300 மீ. அகலமான பகுதியிலுள்ளவை மட்டுமே அகழ்மண்ணுடன் புலம் பெயரும், கொட்டும் புதிய தரையில் வாழ முனையும். சாலை அமைக்கும் பொழுது சாய்க்கும் வேலிகாத்தானையும் ஆரையையும் காரையையும் நாகதாழியையும் இனமாக அழிக்க முடியாதோ, அதே போலத்தான் கால்வாய் அமைக்கும் பொழுது அள்ளப்படும் பவளக் குடலிகளை இனங்களை அழிக்க முடியாது.
ஒதுக்கிடங்கள் இருப்பின் பவளக் குடலிகள் சுண்ணப் பாறைத் தொகுப்புகளை உருவாக்குகின்றன என்பதைப் பார்த்தோம். செயற்கையாக ஒதுக்கிடங்களை அமைத்துக் கொடுத்தால் பவளப் பாறைகள் காலப்போக்கில் வளர்ந்து வருமல்லவா?
துறைமுகத்தில் நீண்டகாலம் பழுதடைந்து கவனிப்பாரற்றுக் கிடக்கும் கப்பல்களின் அடிப்பாகங்களில் பவளக் குடலிகள் ஒட்டுகின்றன, வளர்கின்றன; சுண்ணப் பாறைகளாகவும் பெருகுகின்றன. இவற்றுடன் மட்டியும் சிப்பியும் சேர்ந்து ஒட்டிக் கொள்கின்றன. இத்தகையன செயற்கைச் சூழல்கள்.
பாக்கு நீரிணையில் பவளப் பாறை வளரும் ஒதுக்கிடங்களின் நீரோட்ட வேகத்தையும் ஒட்டுத் தரையின் சூழல் தன்மைகளையும் அளந்தும் தெரிந்தும் ஆய்ந்தால், அதையொட்டிய சூழலை வேறிடத்தில் அமைத்தால் அங்கும் சுண்ணப் பாறைகளைப் பவளக் குடலிகள் கட்டியெழுப்ப முயலுமல்லவா?
கால்வாயை அகழ்ந்த பின்பும், அகழ்பாதை எங்கும் ஓரக் கரைகளில் இருந்து மண் சொரிந்து நிரவ முயலும். காற்றின் வேகத்தால் பாலைவன மணல் சூயசுக் கால்வாயை நிரவுவதையும், ஆழம்பேண் அகழ்வுகள் சூயசுக் கால்வாயில் தொடர்ச்சியாக நடைபெறுவதையும் நோக்க வேண்டும். அதே போல நீரோட்டமும் கடல்தரையியல்பும் அகழ்பாதையில் மணலை நிரவாமல் தடுப்புச் சுவராக, கால்வாயின் இரு கரையோரங்களிலும் பவளக் குடலிகளிகளின் சுண்ணப்பாறைகள் அரணாகலாம்.
மாலை தீவு, இலட்ச தீவு போன்ற தீவுக் கூட்டங்களில் பவளப் பாறைத் தீவுகள் உள. கடல்மட்டத்துக்கு மேலே நிலப்பரப்புத் தெரியும். சிறிய வட்டத் தீவாகத் தெரியும்; அருகே மற்றொரு தீவு; இப்படிப் பல தீவுகள். இத் தீவுகளைத் தாங்கும் ஆழமற்ற கடல்; அத் தீவுகளைச் சுற்றி வட்டம் வட்டமாகப் பவளக் குடலிகள் அமைத்த சுண்ணப் பாறைத் தொகுப்புகள். பாறைத் தொகுப்பு வட்டத்துக்கும் நிலத்துக்கும் இடையே அலைகள் மிகக் குறைந்த ஆழமற்ற, குளம்போன்ற, ஊடுதெரியும் தெளிந்த நீருள்ள கடல். இந்தச் சுண்ணப் பாறைத் தொடர் வட்டம் அந்தத் தீவிற்கு இயற்கை தந்த காப்பரண். பேரலைகள் புகாமல், மனிதக் கொல்லிச் சுறாக்கள் புகாமல், படகுகள், வள்ளங்கள் அலைந்து உடையாமல் பவளப் பாறைக் காப்பரண் அத்தீவுக்கு உதவுகிறது.
சேதுக் கால்வாயின் அகழ்பாதையின் இருமருங்கிலும் சுண்ணப் பாறைகளைக் கட்டியெழுப்பிச் செயற்கைச் சூழலை உருவாக்க ஆய்வுகள் உதவும். மெல்லிய நீரோட்டம், பாதுகாப்பான ஒட்டிடம், சூழல் சார்ந்த பவளக்குடலி இனவகை என்பன இருந்தால் சுண்ணப்பாறைகளைப் பவளக் குடலிகள் கட்டக்கூடும்.
ஒதுக்கையும் பாதுகாப்பையும் தரக்கூடிய பலவுள், சேதாரமான பயன்படாத டயரும் ஒன்று. டயரின் உள்வளைவும் நீர்புகுந்து வெளியேறும் அகல வாயும் நல்ல ஒதுக்கிடம். பல டயர்களை ஒன்றாகக் கட்டி, நங்கூரமிட்டுக் கடல் தரையில் வைத்தால் காலப் போக்கில் டயரின் உள்வளைவுகளுள் பவளக் குடலிகளின் குடம்பிகள் ஒட்டக்கூடும், சுண்ணப் பாறைத் தொகுப்பைக் கட்டக்கூடும். காங்கேயன்துறைப் பகுதியில் வளரும் பவளக் குடலி இனவகைகளை, பவளப்பாறைத் துண்டுகளை, விதைகளாக இச்சூழலில் விட்டுவிடலாம்.
பல்லாண்டுகாலக் கட்டுமானப் பணியின் பெறுபேறாக அந்த இடத்தில் புதிய சூழல் உருவாகும். அங்கே பவளப் பாறைகள் மட்டமல்ல, மட்டிகள் உள்ளிட்ட சிப்பி வகைகளும் நிலைகொள்ளும். டயர் தொகுப்பை அமைக்கும் பாங்கை ஒட்டி, அந்தச் சூழல் பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடமாகும்.
மரக் கட்டைகள் பிறிதொருவகையான ஒட்டிடமும், ஒதுக்கிடமுமாம். சேதாரமுற்ற டயர்களையும் மரக்கட்டைகளையும் இணைத்தும் இத்தகைய பவளக் குடலிகளுக்கு ஒட்டிட ஒதுக்கிடங்களை உருவாக்கலாம்.
இத்தகைய ஆராயச்சிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்துக்கு நிதி ஒதுக்குவதுடன், சேதுக் கால்வாய் அகழும் காலத்திலேயே செயற்கைச் சூழலை உருவாக்கிப் பவளப்பாறை வளர்ப்பைத் தொடங்க உரியன செய்யுமாறு கோரலாம்.

Wednesday, September 28, 2005

சிங்கள மீனவருக்கு ஒரு நீதி, தமிழ் மீனவருக்கு ஒரு நீதியா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மனைவி முத்துலட்சுமியையும், கண்மணிகளான நான்கு குழந்தைகளையும் கையறு நிலையில் விட்டுவிட்டு, நாற்பது வயதான இராமு கடலில் உயிர்நீத்தார்.இராமுவின் உயிரைக் குடித்த இலங்கைக் கடற்படையின் துப்பாக்கி ரவைகள், கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்களின் உயிர்களையும் குடித்து வந்துள. அந்த நீண்ட பட்டியலில் இராமுவின் பெயர் இறுதியானதல்ல. இன்னமும் சில ஆயிரம் தமிழக மீனவர்களைப் பறவைகளைச் சுடுவது போல் கடற்பரப்பில் வைத்துச் சுட்டுக் கொல்ல இலங்கைக் கடற்படை அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.இராமுவுக்குக் கடலைத் தெரியும், மீன் வகைகளைத் தெரியும், படகுகளை ஓட்டத் தெரியும், நீச்சல் தெரியும், வலைகளின் கண் அளவுகள் தெரியும், மிதப்புக் கட்டைகளை வலைகளில் பொருத்தத் தெரியும்; எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த ஆழத்தில் எந்தவித வலையை எந்தக் கண்ணளவில் பயன்படுத்தினால் எவ்வெவ்வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற பட்டறிவும், தொழில் நுட்பமும் நன்றாகவே தெரியும்.பகலிலோ, இரவிலோ கடற்பரப்பில் திசையை இராமு அறிவார். தனக்கும் தன்துறைக்கும் இடையிட்ட தூரத்தையும் அறிவார். கண் புருவத்துக்கு மேல் கைவிரலை அடுக்கிக் கூர்ந்து பார்த்துத் தொலைவில் தெரியும் நிலத்தின் கரையோரத்தையும், கரையிலுள்ள கலங்கரை விளக்கங்களையும், கடற்பரப்பில் மிதக்கும் படகுக் கூட்டங்களையும் எளிதில் கண்டறிவார்.ஆனால் கடலின் நடுவே இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கின்ற கற்பனைக் கோட்டை அவரால் கண்டுபிடிக்க முடியாது. அவர் மட்டுமல்ல, பாக்குநீரினையின் எதிரெதிர் கரைகளில் வாழும் அவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மீனவர் எவராலும் துல்லியமான இந்திய இலங்கை எல்லைக் கோட்டைக் கணிக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாது.இந்தக் கற்பனைக்கோட்டுக்குரிய வரைபடங்கள் இந்தியஇலங்கை நிலஅளவையாரிடம் இருக்கின்றன. வேறு எந்த வழிகாட்டியும் எவரிடமும் இல்லை!தனுஷ்கோடி தொடக்கம் நாகப்பட்டினம் வரை இருநூற்றைம்பது கிமீ. நீண்ட தமிழகத்தின் கரையோரமெங்கும் பல இலட்சக்கணக்கான மீனவர்கள், நூற்றுக்கும் அதிகமான ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் ஊர்களில் உள்ள எவருக்குமே இப்படியான ஒரு கற்பனைக்கோடு உள்ளதென்பதையோ, ஊர்க்கரையில் இருந்து இவ்வளவு தொலைவில் அக்கோடு உள்ளதென்பதையோ, இக்கோட்டுக்கு அப்பால் இலங்கைக் கடல்பகுதி என்பதையோ விளக்கி விவரிக்கும் வரைபடங்களோ, துண்டு வெளியீடுகளோ, சுவரொட்டிகளோ, நிலையான பட அமைப்புகளோ, அறிவிப்புகளோ தரப்படவில்லை.விடுதலை பெற்ற காலத்தில் நூற்றுக்கு பதினைந்து பேர் எழுத்தறிவு பெற்ற நிலைமாறி, இந்தக் கடலோரச் சிற்×ர்களில் நூற்றுக்கு எழுபத்தைந்து அல்லது எண்பது பேர் எழுத்தறிவு பெற்றவராக மாறியுள்ளனர். எல்லைக் கோடு பற்றிய தகவலைச் சொன்னால், அதுவும் உரிய படங்களைக் காட்டிச் சொன்னால் புரிந்து, அறிந்து கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள்.இலங்கைக் கடற்படை சுட்டதால் ஒவ்வொரு ஊரிலும் ஆகக் குறைந்தது இருவராவது பலியாகி இருப்பார். இவர்கள் எவருக்குமே எந்தக் காலத்திலும் பாக்கு நீரிணையில் உள்ள இந்திய இலங்கைக் கடல்எல்லைப் பற்றிய அறிவை யாரும் ஊட்டவில்லை.பாக்குநீரிணையின் கிழக்குக் கரையோரத்தில் பரந்து வாழ்ந்த மீனவர் சமுதாயம், இலங்கை அரசின் கொடுமையான நடவடிக்கைகளால் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக அவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையைத்தானும் இலங்கைக் கடற்படை வழங்க மறுத்து வருகிறது. பலர் தொழிலையே விட்டுவிட்டார்கள். சிலர் தமிழகக் கரைகளுக்கு வந்து தமிழக மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாக்குநீரிணைக்குத் தெற்கே மன்னார்க் குடாவின் தென்கிழக்குக் கோடியில் இலங்கைக் கரையோரமெங்கும் சிங்கள மீனவர்கள் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். எவ்விதத் தடையுமின்றி மீன் பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தும் மீன் பிடிக்கிறார்கள்.கடந்த ஜூன் இரண்டாம் தேதி புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு, கொழும்புக்கு வடக்கே நீர்கொழும்பிலிருந்தும், மாவனல்லையிலிருந்தும் மூன்று படகுகளில் மீன் பிடிக்கப் புறப்பட்ட பதினைந்து மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அவர்களை இரவு எட்டுமணியளவில் இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்தது. மூன்று படகுகளையும் கட்டி இழுத்துக் கொண்டு இராமேஸ்வரம் நோக்கி வந்தது.இதைக் கண்ட ஏனைய சிங்களவரின் மீனவப் படகுகள் நீர்கொழும்புக்கு விரைந்தன.மூன்று படகுகள் கைதான செய்தியை இலங்கைப் பிரதமர் மகிந்தா இராஜபக்சாவிடம் தெரிவித்தனர். உடனே அவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் நிருபம்சென்னிடம் பேசினார். இந்தியத் தூதர் செய்தியைத் தில்லிக்கு எடுத்துக் கூற, தமிழகக் காவல்துறைத் தலைவர் மூலம் அந்த மூன்று படகுகளையும், பதினைந்து மீனவர்களையும் இராமேஸ்வரம் கரைக்குக் கொண்டு வராமலே திருப்பி அனுப்புமாறு தில்லி ஆணையிட்டது. கைதானோர் யாவரையும் கடலில் வைத்தே படகுகளுடன் இரவு பத்தரை மணிக்கு விடுவித்தனராம்!சிங்கள மீனவர் தற்செயலாகவோ, காலநிலை காரணமாகவோ, தென் கடலாகிய மன்னார்க் குடாவின் இந்தியக் கடல் எல்லைக்குள் வரலாம், கைதாகலாம், உடனே விடுவிக்கப்படலாம். இலங்கை அரசு துரித நடவடிக்கை எடுக்கும், தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கை சிங்கள மீனவருக்கு உண்டு.தங்கள் உயிரைக் குடிக்கும் துப்பாக்கி ரவைகள் இந்திய கடலோரக் காவற்படையிடம் இல்லை என்ற நம்பிக்கையும் சிங்கள் மீனவருக்கு உண்டு. ஏனெனில் இந்தியக் கடலோரக் காவற் படை சுட்டு எந்த ஒரு மீனவரும் இன்னும் இறக்கவில்லை!ஆனால் வடகடலான பாக்கு நீரிணையில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது. தடையை மீறிப் போனால் சுடப்படுவர். அவர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலிருந்து மீன் பிடிக்க வரும் கப்பல்களையும், படகுகளையும் இலங்கைக் கடற்படை விரட்டும், வலைகளைக் கைப்பற்றும், மீனவர் பிடித்த மீனை அள்ளிக் கொண்டு போகும், படகுக்குச் சேதம் விளைவிக்கும், மீனவர்களுக்குக் காயம் விளைவிக்கும், அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோய் இலங்கைக் கொடுஞ்சிறைகளில் அடைக்கும் அல்லது பறவைகளைச் சுடுவது போல் அத்தமிழ் மீனவரைச் சுட்டுக் கொல்லும். கேட்பதற்கு யாருமில்லை!கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியக் கடலோரக் காவற்படை இலங்கைத் தமிழருக்குச் சேர்ந்த ஐநூற்றுக்கும் அதிகமான வள்ளங்களையும், படகுகளையும் கைப்பற்றிக் கடலோரமெங்கும் வைத்திருக்கிறது. அவற்றுள் பல சிதிலமாகி, நைந்து, அழியும் நிலையில் உள்ளன. இவற்றை மீட்டு இலங்கைத் தமிழ் மீனவரிடம் கொடுப்பதற்கு இலங்கை அரசின் முயற்சிகள் கண்துடைப்பாகவே உள.இராமு இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசும், அரசியல் தலைவர்களும் தில்லிக்கு இந்த அநீதிகளை எடுத்துச் சொல்லிக் கடிதங்கள் அனுப்பியும் நேரில் கூறியும் வருகின்றனர்.தில்லியின் கருத்தை இலங்கை மதிப்பதில்லை.ஆனால் சிங்கள மீனவரைக் காக்க இலங்கை அரசின் வேண்டுகோளை இந்திய அரசு உடனே நிறைவேற்றுகிறது.கடந்த இருபது ஆண்டுகளாகப் பாக்குநீரிணையின் கடல்வளத்தை முழுமையாகத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்த விடாத இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் கட்டுக்கடங்காமலுள்ளது. இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகிறது; இந்தியக் கடற்கரை ஓரங்களில் வைத்துத் தமிழக மீனவர்களைச் சுடுகிறது; தனுஷ்கோடித் தீவில் உள்ள சிற்×ர்க் குடிசைகளை ஒருமுறை தீயிட்டுக் கொளுத்துகிறது; பாக்கு நீரிணை முழுவதிற்கும் நாட்டாண்மையாளராகியுள்ளது.கடலட்டை, சங்கு, இறால், சிங்கறால், கெளுத்தி, திருக்கை, பாரை, சாலை, வஞ்சிரம், நெத்தலி, சுறா, கணவாய் என பல்கிப் பெருகும் கடல் உயிரின வளங்களைப் பிடிப்பதையே வாழ்வாகக் கொண்டு இலட்சக்கணக்காகச் செறிந்து, பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழ்கின்ற தமிழ் மீனவர்களின் எதிர்காலம் இலங்கைக் கடற்படையின் கட்டுக்கடங்கா அட்டூழியத்தினால் கேள்விக்குறியாகி வருகிறது.

பாக்குநீரிணையில் எல்லைக் கோடு

பாக்குநீரிணையில் எல்லைக் கோட்டு மிதவைகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

அறிமுகம்:பாக்குநீரிணை ஓர் உள்ளகக் கடல். வடக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே மன்னார் வளை குடாவும் பாக்கு நீரிணையைத் தழுவி நிற்கின்றன.பூமியின் நெடுங்கோட்டின் 80 பாகையில் உள்ள தமிழகத்தின் கோடியக்கரையில் இலங்கையின் காரைதீவு வரையான நெடுங்கோடு வங்காள விரிகுடாவையும் பாக்கு நீரிணையையும் பிரிக்கிறது.தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே நகரும் மண்மேடுகளே பாக்கு நீரிணையை மன்னார் வளைகுடாவிலிருந்து பிரிக்கின்றன.பாக்கு நீரிணையை இந்தியாவும், இலங்கையும் தத்தம் கரையோரங்களை ஒட்டிய பகுதிகளாக வரையறுத்து எல்லைக்கோடிட்டுப் பிரித்து வைத்திருக்கின்றன.கோடிக்கரையிலிருந்து தனுஷ்கோடி வரை நீண்ட இந்தியக் கரையோரத்தின் நீளம் ஏறத்தாழ 250 கிமீ.காங்கேயன்துறையிலிருந்து தலைமன்னார் வரை நீண்ட இலங்கைக் கரையோரத்தின் நீளம் ஏறத்தாழ 180 கிமீ. இலங்கையின் எல்லைக்குள் பாக்கு நீரிணைச் சிறு தீவுகளின் கரையோரங்களின் நீளம் ஏறத்தாழ 90 கிலோமீட்டர்.பாக்குநீரிணையை இரு நாடுகளுக்காகப் பிரிக்கும் எல்லைக்கோட்டின் நீளம் ஏறத்தாழ 350 கிலோமீட்டர்.பாக்குநீரிணையின் மொத்த மேற்பரப்பளவு தோராயமாக 10,000 சதுர கிமீ. இதில் 4,500 சதுர கிமீ. மேற்பரப்பளவு இந்தியப் பகுதிக்குள்ளும், 5,500 சதுர கிமீ. மேற்பரப்பளவு இலங்கைப் பகுதிக்குள்ளும் உள்ளது.ஆழங்கள்:வங்காள விரிகுடாவிலிருந்து பாக்குநீரிணைக்குள் கப்பல் புகுவதற்கு ஏற்ப மூன்று வாய்க்கால்களே உள. அவையாவன வடவாய்க்கால், நடுவாய்க்கால், மற்றும் தென்வாய்க்கால். வடவாய்க்காலும், நடுவாய்க்காலும் 8 மீ. ஆழமுள்ளனவாய் இந்திய எல்லைக்குள் அமைந்துள்ளன. 12 மீ. வரை ஆழமான தென்வாய்க்கால் இலங்கை எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த மூன்று வாய்க்கால்களையும் பிரிக்கும் இருதரவைகள் 3 மீ. ஆழம் உடையன.இந்திய எல்லைக்குளுள்ள பகுதியின் 65% கடல் 10 மீ. ஆழத்துக்குள் கரையிலிருந்துப் படிப்படியாக ஆழமாகிறது. எஞ்சிய 35% கடல் சராசரியாகப் 11 மீ. ஆழம் கொண்டது.இலங்கையின் எல்லைக்குள் கரையிலிருந்து 50% கடல் 10 மீ. ஆழத்துக்குக் கரையிலிருந்துப் படிப்படியாக ஆழமாகிறது. எஞ்சிய 50% கடல் சராசரியாகப் 13 மீ. ஆழம் கொண்டது.பாக்குநீரிணையின் ஆகக்கூடிய ஆழம் 15.2 மீ. உள்ள கிணறு தான். இது நெடுந்தீவுக்கு அருகில் உள்ளது. இந்திய, இலங்கை எல்லைக்கோட்டின் நீளமுழுவதிலும் ஆகக்கூடிய ஆழம் 13 மீ. ஆகக்குறைந்த ஆழம் 6 மீ.ஊர்கள்:தனுஷ்கோடியிலிருந்து கோடிக்கரை வரை உள்ள தமிழகக் கடற்கரை ஓரத்தில் பதினொரு பேரூர்கள் உள்ளன. அவையாவன, தனுஷ்கோடி,இராமேஸ்வரம், மண்டபம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி, அம்மாப்பட்டினம், காட்டுமாவடி, அம்மணிசத்திரம், அதிராம்பட்டினம், கோடிக்கரை.இவைதவிர பல சிற்×ர்களும் உள.மீனவர் துன்பம்:1921ஆம் ஆண்டுக்கு முன்பு, பாக்குநீரிணையில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே மீன்பிடி எல்லைகள் இருக்கவில்லை. அக்காலத்தில் வள்ளங்களோ, வலைகளோ, தொழில்நுட்பமோ சொல்லுமளவு வளர்ச்சியடையவுமில்லை.1921இல் சென்னை மாகாணத்தின் சார்பிலும் இலங்கையரசின் சார்பிலும் மீன்பிடி எல்லைகளை வரையறுக்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டது.1974இல் பாக்குநீரிணையின் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்தப் பொருந்தக்கூடிய, இறைமையை வரையறுக்கும் எல்லைக்கோட்டு நிலைகளை அமைத்து உடன்பாடு ஏற்பட்டது. எனினும் இருநாட்டு மீனவர்களும், மீனவர்கள் அல்லாதவர்களும் இந்த எல்லைக்கோட்டை மதிக்காது நடந்து வந்தனர். இந்தியா இதுபற்றி அதிகம் அக்கறை கொள்ளவில்லை.1949 வரை இலங்கை, இந்தியப் பயணங்கள் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாடுகளின்றி நடைபெற்று வந்தன. 1949இல் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டை இலங்கை அரசு நடைமுறைக்குக் கொணடுவர, இந்தியாவும் அதனைப் பின்பற்றியது. இந்தியாவிலிருந்து ஆவணங்களின்றி இலங்கைக்குப் போய் வருவோரை கள்ளத்தோணிகள் என இலங்கை அழைத்தது. இத்தகையோரின் போக்குவரவைக் கட்டுப்படுத்தத் தலைமன்னாரிலும், காரைநகரிலும் கடற்படை முகாம்களை இலங்கை அமைத்துக் கண்காணிக்கத் தொடங்கியது.பாக்குநீரிணையில் போய்வருவோரையும் மீன்பிடிப்போரையும் கைது செய்தலும், சுட்டுக் கொல்லுதலும் அக்காலங்களில் தொடங்கின. இந்தியக் கரையோரங்களில் சென்னை மாகாண அரசின் காவல்துறை அமைப்புகளைத் தவிர, இந்திய அரசின் கடற்படையமைப்பு எதுவும் 1980 வரை இருக்கவில்லை.இதனால் பாக்குநீரிணையில் இலங்கைக் கடற்படையின் கை தொடக்க காலம் முதலாக ஓங்கியிருந்தது. அதுமட்டுமல்ல, இலங்கையின் தலைமன்னார் கடற்படை முகாமிலிருந்துத் தெற்கே கற்பிட்டிக் கடற்கரை முகாமிற்குச் செல்லும் ஆழ்கடல் இயந்திர வள்ளங்கள் பாம்பன் தீவுக்கும் மண்டபத்திற்கும் இடையேயுள்ள பாம்பன் கால்வாயையே பயன்படுத்தின. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வழங்கியது.1974இன் எல்லை உடன்பாடின் பின் தமிழக மீனவர்களைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் அதிகரித்தது.1983இன் பின் தொடங்கிய ஈழப்போர்கள் பாக்குநீரிணையில் பயணிக்கும் அனைவரையும் போராளிகளாகக் கருதவும், சுட்டுவீழ்த்தி அழிக்கவும் இலங்கைக் கடற்படைக்கு ஆதிபத்தியத்தைக் கொடுத்தது. இன்றுவரை அந்த ஆதிபத்தியம் தொடர்வதால் தமிழக மீனவர்களில் 1,000 அதிகமான எண்ணிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். 1,000 படகுகளுக்கு மேல் சேதமுற்றுள்ளன. பலகோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும், கருவிகளும் அழிந்துள்ளன.தமிழக மீனவர்களின் இடர்களையும் வழி 1:அறிவூட்டல்:இந்தியப் பகுதிக்குள்ளேயே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டுமென கடலுக்குப் போகும் ஒவ்வொரு மீனவனுக்கும் கருத்திலிருக்குமாறு அறிவூட்ட வேண்டியது தமிழக மீன்வளத்துறையின் கடமை.பேரூர் ஒவ்வொன்றிலும், சிற்×ர் ஒவ்வொன்றிலும் வரைபடம் ஒன்றைப் பெரிய அளவில் (3 மீ. உயரம் 3 மீ. அகலம்) வரைந்துச் சமுதாயக் கூடத்தினருகில் பொருத்தி வைக்கவேண்டும். அந்த ஊரிலிருந்து வடக்காகச் சென்றால் எத்தனை கிமீ. தொலைவில் எல்லைக்கோடு வரும், கிழக்காகச் சென்றால் எத்தனை கிமீ. தொலைவில் எல்லைக்கோடு வரும், தெற்காகச் சென்றால் எத்தனை கிமீ. தொலைவில் எல்லைக்கோடு வரும் என்ற தகவல் துல்லியமாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.இந்த வரைபடங்களைத் தயாரிப்பதில் நிலஅளவைத் துறையினர் பங்குபெற வேண்டும். கோடிக்கரையிலிருந்து தனுஷ்கோடி வரையிலானக் கடற்கரை ஓரமெங்கும் ஆகக் குறைந்தது இத்தகைய வரைபடத் தட்டிகள் 50 எண்ணிக்கைக்கு அதிகமாக அமைக்கலாம். மீனவரின் செறிவை ஒட்டி மீன்வளத்துறையினர் எந்த ஊரில் அமையவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நனையாத, வலையாத, பிளாஸ்டிக்கில் அச்சிட்ட 50 செமீ. அகலம் 50 செமீ. உயரம் கொண்ட வரைபடத் தகடு ஒன்று, ஒவ்வொரு இயந்திரப் படகிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.இந்தப் பேரூர்களிலும், சிற்×ர்களிலும் 8ஆம் வகுப்பிற்கு மேல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குச் சமூகக் கல்விப் பாடத்தின் பகுதியாக இந்த வரைபடத்தின் அகல, நீளங்கள், தூரங்கள், கடல் ஆழங்கள், மீன் வகைகள், வலைகள், கருவிகள் யாவற்றையும் பற்றிய அறிவைப் படிப்படியாக ஊட்டுமாறு பாடத்திட்டப் பகுதி அமையவேண்டும்.ஒலிபெருக்கிகள், ஒலி,ஒளி விளக்கக் கருவிகள், தமிழில் உரையாற்றக்கூடியப் பேச்சாளர், விளக்க வெளியீடுகள் கொண்ட ஒரு பேருந்து, நாளுக்கு ஒரு கிராமமெனத் தேர்ந்து மீனவர்களுக்குக் கடல் எல்லையை விளக்கும் மீன்வளத்துறையின் பிரசார வாகனமாக அமைய வேண்டும்.2:எல்லைக்கோடு காட்டல்:இந்திய இலங்கை எல்லைக்கோட்டு வரைவு நிலைகளிலிருந்து இந்தியப் பகுதிக்குள் ஒரு கிமீ. உள்ளே அமையும் சமாந்திரக் கோட்டில் எல்லைகாட்டி மிதவைகளை இந்தக் கோட்டின் 550 கிலோமீட்டர் தொலைவுக்கும் அமைக்க வேண்டும். இந்திய, இலங்கை எல்லைக்கோட்டில் மிதவைக்கோடு அமைப்பதெனில் இலங்கை, இந்திய அதிகாரிகள் கலந்து பேசவேண்டும். இந்தியப் பகுதிக்குள் 1 கிலோமீட்டர் உள்ளே தள்ளிய சமாந்திரக் கோட்டில் அமைப்பதெனில் அது மாநில அரசாகிய தமிழக அரசின் மீன்வளத்துறையே செய்துவிடலாம்.ஆகக் குறைந்தது 5 கிலோமீட்டர் இடைவெளி இரு மிதவைகளுக்கிடையே இருக்க வேண்டும்.கடலின் தரையில் கருங்கல் நங்கூரம் இறக்கித் துருப்பிடியாக் கம்பிகளைப் பொருத்தி எல்லைக்கோடு மிதவைகளை இணைக்க வேண்டும். எல்லைக் கோடு மிதவைகள் ஆகக்குறைந்தது ஒரு மீட்டர் விட்டமும், ஒரு மீட்டர் உயரமும் உள்ளவையாக இருக்க வேண்டும். பார்த்தவுடன் அடையாளம் காணும்படியாக மினுங்கும் வண்ணப்பூச்சுத் தெரியவேண்டும். எல்லைக்கோட்டு மிதவை வண்ணப்பூச்சு அனைத்துலகத் தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மிதவையின் உச்சியில் விளக்குப் பொருத்தியிருக்க வேண்டும். பகலில் சூரிய ஒளி ஆற்றலைச் சேமித்து இருள் கவிந்ததும் தானாகவே ஒளிரக் கூடியதாக இவ்விளக்குகள் அமையும். 3 கிலோமீட்டர் வரை கடற்பரப்பின் ஈரலிப்பு வலையத்தை ஊடறுத்து ஒளிதெரியக் கூடியதான வெளிச்ச அடர்த்தியை அவ்விளக்குகள் பெற்றிருக்க வேண்டும். மிதவையின் மேலே சிறிய அளவிலான இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விடவேண்டும். அல்லது மிதலையில் வரையலாம். எல்லைக்கோட்டு மிதவைகளுக்கானக் கம்பியின் ஆகக்கூடிய நீளம் 20 மீ. ஆகும். வெள்ளம், வற்று இவற்றுக்கு இடையிட்ட கடல்மட்ட உயரத்தைக் கணித்தாலும், வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கடல்மட்ட வெள்ளப்பெருக்களவு உயர்வதுடன் புயற்காற்றும் பாக்குநீரிணையை அலைக்கழிக்கும் என்பதை உளத்திருத்தியே ஒவ்வொரு மிதவைக்குரியக் கம்பியின் நீளத்தைக் கணிக்க வேண்டும்.இந்திய, இலங்கை எல்லைக்கோட்டுக்குக் கிழக்குப் பக்கத்தில் பாக்கு நீரிணையின் இலங்கைப் பகுதிக்குள் எல்லைக்கோட்டிலிருந்து உள்ளே ஒரு கிமீ. தள்ளி அமையும் சமாந்திரக் கோட்டில், இதையொத்த எல்லைக்கோட்டு மிதவைகளை அமைக்குமாறு இலங்கையரசை இந்திய அரசு கோருவதும், அவ்வாறு அமைவதும் தமிழக மீனவருக்கு மேலதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.

Friday, September 16, 2005

உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர் 30.7.2005

சேதுக் கால்வாய் - சிங்களவரின் அச்சங்கள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன், (ஐ.நா.வின் முன்னாள் ஆலோசகர்)
இரண்டு கோடி மக்கள்; 65,000 சகிமீ. பரப்பளவு; இருப்பதோ ஒரு துறைமுகம்; எண்ணெய் நிரப்ப, பழுதுபார்க்க, சரக்குப் பரிமாற, மாலுமிகள் ஓய்வுபெற என மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வந்து போகும் கப்பல்களால் வற்றாப் பொருளாதாரச் சுழற்சி.
உங்களிடம் பத்துக்கு மேற்பட்ட சிறந்த துறைமுகங்கள். சிறிய துறைமுகங்களோ பற்பல; நீங்களோ பெரிய நாடு; நாங்கள் சிறிய நாடு. எங்களின் ஒரே ஒரு துறைமுகத்தின் வளர்ச்சியையும் சேதுக் கால்வாய்த் திட்டம் குழப்பிவிடும்; பெருந்தன்மையுடன் எங்களை வளர விடுங்கள்; சேதுக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிடுங்கள்.
இவையும் பிறவுமான கருத்துகளைச் சந்திரிகா தலைமையிலான அரசு இந்தியாவுக்கு எடுத்துக் கூறி வருகிறது; இந்தியாவின் சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிட, வல்லுநர் மற்றும் அரசியல்வாதிகள் கொண்ட உயர்மட்டக்குழுவையும் அமைத்துளது.
சேதுக் கால்வாயத் திட்டத்துக்குத் தமிழகம் புதுவையில் எதிர்ப்புத் தெரிவித்த அரசு சாராக் குழுக்களுக்கு இலங்கை அரசின் தூண்டுதலும் மறைமுக உதவியும் இருந்தன என அரசல் புரசலாகப் பேசியோரும் உளர்.
சந்திரிகாவின் தாயாரான பிரதமர் சிறீமாவோ 1960களில் இத்திட்டத்தை எதிர்த்தார். பிரதமர் நேருவுக்குக் கடிதமும் எழுதினார். சேதுக் கால்வாயை அமைக்க விரும்பிய பிரதமர் நேரு, அதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை இதனால் கைவிட்டார். இலங்கையும் இந்தியாவும் பரிமாறிய அக் கடித நகல்களைத் தமிழக சட்டசபையில் முன்வைத்து 1980களில் பேசிய பழ. நெடுமாறன் சேதுக் கால்வாயை அமைக்க வலியுறுத்தினார்.
அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலர் கொழும்புக்குப் போயிருந்தார். இலங்கையின் சிக்கல்களையும் கவனத்தில் கொண்டே சேதுக் கால்வாயை அமைப்போம் எனக் கூறியிருந்தார். இப்படிக் கூறிய செய்தி வரிகளின் அச்சு மைகாய முன்பே, இலங்கையின் கருத்துகளைக் கேளாமல் சேதுக் கால்வாய்த் திட்டத்துக்கு இந்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளதாகக் கொழும்பு குமுறிக் கொண்டிருப்பதுடன், இந்திய வெளியுறவுச் செயலரின் இரட்டை நாக்குப் போக்கைக் கண்டித்தும் வருகிறது.
சிங்கள மக்களை இத்திட்டத்துக்கு எதிராகக் கிளப்புவதற்காகக் கற்பனைச் செய்திகள் பல கொழும்பில் மிதந்துள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கண்ட மேடையை அகழ்வதால், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதி கடலுக்குள் சாய்ந்துவிடும் அபாயம் உள்ளதான செய்தி அவற்றுள் ஒன்று.
ஈழத் தமிழ் மக்களையும் இத்திட்டத்துக்கு எதிராகக் கொழும்பு தூண்டி வருகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து 4 கிமீ. தொலைவில் கால்வாய் அமைவதாகவும், இந்தியக் கடற்படைக் கப்பல் பீரங்கிகளின் வீச்செல்லை வலயத்துள் தமிழ் மக்கள் சிக்குவர் என்றும், இதைத் தெரிந்தும் விடுதலைப் புலிகள் இத்திட்டத்தை எதிர்க்காமல் இருப்பது வியப்பே என்றும் கொழும்பில் கற்பனைகளைப் பரப்புகின்றனர்.
சேதுக் கால்வாய்த் திட்ட அறிக்கைகள் யாவும், இணைய தளங்களில் கடந்த எட்டு மாதங்களாக, அவ்வப்போது இறக்கிப் படியெடுக்கக் கூடியதாக, அனைவருக்கும் கிடைக்கின்றன. வியப்பென்னவெனில் இவற்றைத் தமக்கு எவரும் காட்டவில்லை என இலங்கை அரசு கூறிவருகிறது.
இந்த அச்சங்கள் அனைத்தும் தேவையற்றவை. பிராந்தியத்தின் எந்த ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் தமக்கும் சாதகமாக்கி, அதன் பயன்கள் தம் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்வதே இலங்கை அரசின் கடன்.
12 மீ. ஆழமும் 300 மீ. அகலமும் கொண்ட சேதுக் கால்வாய்க்காக 58 கிமீ. தொலைவுக்கு, 8 கோடி கனமீ. சேற்று மணலை ஒரேஒருமுறை தூர்வாரினால் கண்ட மேடைக்கு எந்தப் பாதிப்பும் வராது. நெதர்லாந்து நாட்டுத் துறைமுகங்களைச் சேற்றால் நிரவாமல் காக்க ஆண்டுதோறும் 5 கோடி கனமீ. சேற்று மணலைத் தூர்வாருகின்றனரே.
இந்திய எல்லைக்குள் அமையவுள்ள சேதுக்கால்வாய் யாழ்ப்பாணக் குடநாட்டிலிருந்து ஆகக் குறந்தது 16 கிமீ. தொலைவில் உள்ளது; கச்சதீவிற்குக் கிழக்கே 4 கிமீ. தொலைவில் அமைவது.
மக்கள் தொகையால், எண்ணெய் வளத்தால், இயற்கைச் செல்வங்களால், நிலப்பரப்பால் பெரிய நாடு மலேசியா. குட்டித் தீவு நாடான சிங்கப்பூரில் குடிக்கும் நீர்முதலாக அனைத்துமே இறக்குமதியாகின்றன; மக்கள் தொகையும் குறைவு. ஆனாலும் அயராத, கடின உழைப்பாற்றலுள்ள மக்களும், திட்டமிட்டு நாட்டை வளர்க்கும் அரசியல் தலைமையும் சிங்கப்பூரில் இருப்பதால் மலேசியாவின் முக்கிய துறைமுகங்களான பினாங்கும் கிளாங்கும் பெறமுடியாத புகழையும் வருவாயையும் சிங்கப்பூர்த் துறைமுகம் ஈட்டித் தருவதுடன் ஆசியாவின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
கொழும்புத் துறைமுத்தை வளர்க்க ஆங்கிலேயர் கொச்சியிலிருந்து 1920களில் மலையாளிகளை அழைத்துச் சென்றதற்குச் சிங்களவரின் இயலாமையே காரணம். 1930களின் பிற்பகுதியில், சிங்களவர் கலவரம் செய்து, மலையாளிகளைக் கொழும்புத் துறைமுகத்திலிருந்து விரட்ட முயன்றதைத் தடுக்கப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஏ. கே. கோபாலன் கொழும்புக்குச் சென்றார்; சிங்களத் தலைமை ஒப்பவில்லை; மலையாளிகள் கொச்சி திரும்பினர், சிங்கப்பூரைவிடச் சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டிய கொழும்புத் துறைமுகம் இன்றும் நொண்டி நடைபோடுவதற்கு அமையவுள்ள சேதுக் கால்வாய் காரணமா?
சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களுக்குப் பாக்கு நீரிணை இயற்கையான ஒதுக்குப் புறமாகும். கப்பல்கள் பழுதுபார்க்கும் துறைமுகங்கள் பாக்கு நீரிணையின் இரு பக்கமும் பெருகும். கிழக்கு, மேற்கு மற்றும் இந்தியச் சரக்குகளின் பரிமாற்றத்துக்குப் புதிய துறைமுகங்கள் அமையும்; பயணிகளின் துறைமுகங்களும் பெருகும்; இந்தியக் கரையில் தூத்துக்குடி மட்டுமல்ல, நாகப்பட்டினமும் வளரும், தனுஷ்கோடியில் மீண்டும் கப்பல் பழுதுபார்ப்பதைப் புதுப்பிப்பர். இலங்கையில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேயன்துறை, ஊர்காவற்றுறை ஆகிய துறைமுகங்கள் தானாக வளரும். மாதோட்டம் மீண்டும் புத்துயிர் பெறும். திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவம் வளரும்.
பாக்கு நீரிணையின் இருபுறமும் வாழும் மீனவரின் மீன்பிடி எல்லைகள் விரியும். தாய்லாந்து, தாய்வான், யப்பான், பிரஞ்சு மற்றும் இந்தோனீசிய மீன்பிடிக் கப்பல்கள் வங்காள விரிகுடாவுக்குள் வந்து, இந்திய மற்றும் இலங்கைப் பொருளாதாதர வலயத்துள் மீன்பிடித்து வருகின்றன. இந்த வளங்களை இராமேசுவரம் மற்றும் மன்னார் மீனவர்கள் சேதுக் கால்வாய் வழி பாரிய மீன்பிடிக் கப்பல்களில் வங்காள விரிகுடாவுள் சென்று, சில வாரங்கள் கடலில் தங்கி மீன் பிடிப்பர். ஊடுருவும் பிறநாட்டு மீன் பிடிக் கப்பல்களை விரட்ட இந்தியக் கடலோரக் காவற்படை சீறிப் பாயும்; தமிழ் மீனவரை நோக்கிய இலங்கைக் கடற்படைப் பீரங்கிகள், பிறநாட்டு மீன்பிடிக் கப்பல்களை விரட்ட உதவும்.
கடின உழைப்புள்ள மக்கள்; வற்றாத திறமையுள்ள மக்கள்; கடலாடுவதில் தணியா ஆர்வமுள்ள மக்கள்; வளர்ச்சியை வாழ்வாக்கும் மோகமுள்ள மக்கள்; இம்மக்களை நெறிப்படுத்தி, வேகமான வளர்ச்சிக்குத் திட்டமிடும் அரசியல் தலைமை; இதனாலன்றோ சேதுக் கால்வாயின் இரு கரைகளிலும் வாழும் தமிழ் மக்களும், சிறப்பாக மீனவரும் சிறந்த எதிர்காலத்தைப் பெற உள்ளனர்.
இதே கண்ணோட்டத்துடன் முன்னேறக் கொழும்புத் தலைமைக்கு சேதுக் கால்வாய் நல்வாய்ப்பு ஆகும். சேதுக் கால்வாய்த் திட்டத்தை ஒட்டிக் கற்பனையான அச்சங்களைக் கைவிட்டு, கொழும்புத் துறைமுகத்தை வளர்க்க, கடின உழைப்பும் கூர்மையான தொழினுட்ப அறிவும் கொண்ட சிங்களக் குமுகாயத்தை உருவாக்குவதே கொழும்பு அரசின் முதற் பணி.
பயணிகள், மீன்பிடி மற்றும் சரக்குக் கப்பல் தொடர்பாக இந்திய - இலங்கைக் கூட்டு வளர்ச்சித் திட்டங்களை அமைத்துக் கொழும்புத் துறைமுகத்தைச் சிங்கப்பூருக்குச் சமமானதாக, அதைவிடச் சிறப்பானதாக வளர்ப்பதே கொழும்பு அரசின் முன்னுள்ள பாரிய பணி.

இந்தியா டுடே30.06.2005

சேதுக் கால்வாயும் சுற்றுச் சூழலும்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஐ.நா. முன்னாள் ஆலோசகர், கடலியல் வல்லுநர்

கடலின் தரையை ஆழமாக்கி, கால்வாயாக்கும் மனித முயற்சி; பாரிய கப்பல்களை அக்கால்வாய் வழியாக அனுப்பும் மனித முயற்சி; இவை அச்சூழலின் இயல்பு நிலையைப் பாதிக்கும் என்பர்.
கடலின் தரை, தாங்கி நிற்கும் நீர்த் தொகுப்பு, மேலே காற்று மண்டலம், தரையிலும் நீரிலும் காற்றிலும் வாழும் தாவரம் மற்றும் விலங்கு உயிரினங்கள் - இந்நான்கும் தம்மிடையே ஒன்றுடன் ஒன்று இயைந்து இயல்பாகச் செயல்படும் சமச்சீர்நிலை; கால்வாயாக்கிக் கப்பலோட்டும் மனித முயற்சி இந்தச் சமச்சீர் நிலையைப் பாதிக்கிறது; மீட்டெடுக்க முடியாத அளவுக்குப் பாதிக்கிறது; சேதுக்கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்போரின் வாதங்கள் இவையே.
சூழலின் நான்கு முகங்களாகத் தரை, நீர், காற்று, உயிரினம்; மனித முயற்சியின் இரண்டு முகங்களாகக் காய்வாய் தோண்டிப் பாரமரித்தல், கப்பல் ஓட்டல்.
தரை:
ஈராண்டுக் காலத்தில், 75 கிமீ நீளம், 300 மீ. அகலம், சராசரி 4 மீ. ஆழமுமாகத் தோண்டி, 8 கோடி கன மீ. சேற்று மணலை (பாக்கு நீரிணையின் தரையில் 17 மீ. ஆழம் வரை கற் பாங்காக இல்லை) அள்ளி வடக்கே வங்காள விரிகுடாவின் 1,000 மீ. ஆழமுள்ள கடற்பகுதிக்குள்ளும் தெற்கே மன்னார் வளைகுடாவின் 500 மீ. ஆழமுள்ள கடற்பகுதிக்குள்ளும் கொட்டுவர்.
இத்தகைய மணல் அகழ்வுப் பணிகள் துறைமுகப் பகுதிகளில் வழமை. கொச்சித் துறைமுகத்தில் ஆண்டுதோறும் 1 கோடி கன மீ. வரை அகழ்ந்து வாரி, அரபிக் கடலுள் கொட்டுவர். நெதர்லாந்துத் துறைமுகங்களில் ஆண்டுக்கு 4 கோடி கன மீ. சேற்று மணலை அகழ்ந்து வாரி அத்திலாந்திக் கடலுள் கொட்டுவர். சென்னை தொடக்கம் கொல்கத்தா வரையுள்ள துறைமுகங்களில் இவ்வாறு தொடர்ந்து அகழ்வதும் தூர்வாருவதும் ஆழ் கடலுள் சேற்று மணலைக் கொட்டுவதும் வழமை. இந்தியக் கரையோரத் துறைமுகங்களில் தரையில் தொடர்ந்து படியும் சேற்று மணலை அகழ்ந்து வாரி ஆழ்கடலுள் கொட்டித் துறைமுகங்களைக் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக வைத்திருக்க இந்தியத் தூர்வாரும் கழகம் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வருகிறது. இந்தக் கழகமே சேதுக் கால்வாயையும் அகழவுள்ளது. சுற்றுச்சூழலைப் பேணுவதில் உலகத்தர நியதிகளை இந்த நிறுவனம் கடைப்பிடித்து வருவதால், முன் அநுபவங்கள் சேதுக்கால்வாயைத் தோண்டலிலும் பயன்படுமாதலால் சூழலின் சமச்சீர்நிலை பெருமளவுக்குக் கெடாது.
கால்வாயைத் தோண்டியபின், தொடர்ந்து படியும் சேற்று மணலை அவ்வப்போது தூர்வாருவர். பாக்கு நீரிணையில் ஆண்டுக்கு 0.001 மீ பருமனுக்குச் சேற்று மணல் படிவதாகச் சந்திரமோகனும் பிறரும் (2001) ஆய்ந்து கூறினர். கோடிக்கரை அருகே ஆண்டுக்கு 0.24 மீ. -0.29 மீ. பருமனுக்குச் சேற்று மணல் படிவதாக எஸ். எம். இராமசாமியும் பிறரும் (1998) பின்னர், விக்டர் இராசமாணிக்கமும் (2004) ஆய்ந்து கூறியுள்ளனர். எவ்வாறாயினும் ஏனைய கிழக்குத் துறைமுகங்களைப் போலச் சேதுக் கால்வாயிலும் பராமரிப்புப் தூர்வாரும் பணி இடையீடின்றித் தொடரவேண்டும் என்பதையே இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
பாலைவன மணல் சொரிந்து நிரவாமல் சூயசுக் கால்வாயைத் தொடர்ச்சியாகத் தூர்வாருவதும், பனாமா, சென் லாரன்சு போன்ற கால்வாய்களில் இடையீடின்றித் தூர்வாருவதும் வழமையான பணிகள்; சூழலுக்குப் பாதிப்பு மிகக் குறைவு.
பாக்கு நீரிணையின் தரைப் படிமங்களில் ஏற்கனவே தார், எண்ணெய்ச் சாயல்கள் உள்ளதாக தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு மையம் (2004) கூறியுள்ளது. இது உலகளாவிய எந்திரமயமாக்கலின் விளைவு. கட்டுமரம் தொடக்கம் பாரிய கப்பல் வரை பெட்ரோலிய எரிபொருளை நம்பி இருப்பதால் ஒதுக்குக் கடலான ஆழம் குறைந்த பாக்கு நீரிணையின் தரையும் பெட்ரோலியக் கசிவுகளைத் தாங்குவது வியப்பன்று. புதிதாக இக்கசிவுகளைக் கப்பல்கள் தரையிறக்காமல் பார்க்கவேண்டும். பெட்ரோலியக் கசிவுகளை உணவாக்கும் நுண்ணுயிரினங்கள் கடலில் இருப்பதால், காலப்போக்கில் இக்கசிவுகள் மறைவது உலகளாவிய நிகழ்வு.
நீர்:
ஐராவதியும் பிரமபுத்திரையும் கங்கையும் மாநதியும் கோதாவரியும் அடித்துத் தள்ளிய வண்டல்சேறு, வாடைக்காற்று வலசை நீரோட்டத்துடன், மூன்று திங்களுக்கு, கலங்கல்சேற்றுக் கோலத்தில் வங்கக் கடலிலிருந்து பாக்கு நீரிணைக்குள் புகுகின்றது. இக்கலக்கல் சேற்றின் ஊட்டச் சத்தே பாக்குநீரிணையில் மிதக்கும் தாவர நுண்ணுயிர்களுக்கு உரம். கிருஷ்ணையும் காவிரியும் வைகையும் வற்று நதிகளாகியபின், வற்றிய உரத்தை ஈடுகட்டுவது இந்த வலசைக் கலக்கலே. கடலின் கலங்கல்நிலை முதனிலை உற்பத்திக்கு உரமாகிறதேயன்றி ஊறாவதில்லை. அகழ்வுப் பணிகளின் போதும், வாரிய சேற்று மணலை ஆழ்கடலுள் கொட்டும் போதும், பராமரிப்புத் தூர்வாரலின் போதும் கடல்நீர் கலங்குவது உணவு உற்பத்திக்கு வீறு; சூழல் சமச்சீர்நிலைக்கு ஊறன்று.
கோடிக்கரையின் அருகே அமையவுள்ள 55 கிமீ. நீளமான, 300 மீ. அகலமான, 12 மீ. ஆழமான கால்வாய், வாடையின் வலசை நீரோட்டத்தைப் பாக்கு நீரிணைக்குள் வீறுடன் அழைத்துச் சென்று அங்கு முதனிலை உற்பத்தியை ஊக்குவிக்கும்; அதுவே மீன்வளப் பெருக்கத்திற்கு ஊற்றுமாகும். அவ்வாறே சேதுத் திடல்களின் அருகே அமையவுள்ள 20 கிமீ. நீளமான, 300 மீ. அகலமான, 12 மீ. ஆழமான கால்வாய், தென்றல் கால, வங்கக் கடலின் இடசை நீரோட்ட ஈர்ப்பில், பாக்கு நீரிணையில் இருந்து வெளியேறும் நீரை ஈடுசெய்ய மன்னார் வளைகுடாவிலிருந்து நீர்த்தொகுப்பை வீறுடன் அழைத்துவரும். முதனிலை உற்பத்திக்கு இதுவே முதலீட்டு உரமுமாகும்.
வங்கக் கடலின் வலசை நீரோட்டமான ஆற்றுப் போக்கில், உள்வளைவுத் திடல்களாக மணல்மேல்குடிப் பகுதியும், கழிமுகத் திடல்களாக சேதுவின் நகரும் மணல்மேடுகளும் அமைந்திருப்தைக் கருத்தில் கொண்டு, நீரோட்ட மாற்றங்களால் கரையோர மாறுதல்களை அளவிடும் பொறியியலாளர், இக்கால்வாய் அமைப்பால் புதிய திடல்கள் பாக்கு நீரிணைக்குள் தோன்றுமா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பர்.
தமிழகக் கரையோரத்தை, 1881, 1883, 2004 ஆகிய ஆண்டுகளில் ஆழிப்பேரலைகள் தாக்கின. மற்றுமொரு ஆழிப்பேரலை சேதுக் கால்வாயைப் பாதிக்குமா? ஆழிப்பேரலை அடிக்கடி தாக்கும் நடுஅமெரிக்கக் கண்டத்தின் பனாமாக் கால்வாய் இடைவிடாது செயற்படுவதை நோக்குக. தமிழகத்தை அரிதாகத் தாக்கக் கூடிய ஆழிப் பேரலை பற்றிய எச்சரிக்கைக் கருவிகள் இந்து மாகடலெங்கும் அமையவுள்ளதையும் நோக்குக.
எண்ணெய்க் கசிவுகள் கப்பலில் இருந்து வரலாம், எண்ணெய்க் கப்பல் உடைந்தால் கடற்பரப்பில் எண்ணெய் பெருகலாம், கரையெங்கும் தார் திரளலாம் என்பன நியாயமான அச்சங்கள். உலகெங்கும் உள்ள கடல்களில் இடைவிடாது எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்கின்றன. உலகுக்குப் பொதுவான அபாயம் என்பதால் 1973, 1978 ஆகிய ஆண்டுகளில் உலக நாடுகளுக்கான விதிகள் தயாரிக்கப்பட்டன. இவ்விதிகளை ஏற்ற நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்த விதிகளை மீறாத கப்பல் போக்குவரத்து, சூழல்சமச்சீரைப் பாதிக்காது. சேதுக்கால்வாய் விதிவிலக்கல்ல.
காற்று:
1891 - 2000 காலப் பகுதியில் மணிக்கு 89 கிமீ. வேகத்தைவிட மிகுந்த வேகத்தில் 23 புயல்கள் பாக்கு நீரிணையைக் கடந்துள. இவற்றுள் 1964இல் வீசிய புயல் கடுமையான விளைவுகளைத் தந்தது. சேதுக்கால்வாயில் பயணிக்கும் கப்பல்கள் தரைதட்ட, கவிழ இத்தகைய புயல்கள் காரணமாகலாம் என்ற கருத்து உண்டு. வாடைக் காற்றுக் காலக் கப்பல் பயணம் அபாயமானது என்பதை மாலுமிகள் அறிவர். வானிலை அறிவிப்புகள் அவர்களின் வழிகாட்டிகள். புயல் எச்சரிக்கைகளைக் கையாளும் நடைமுறைகளைக் மீகாமான்கள் பயின்றவர். புயல்கள் உலகெங்கும் வீசுகின்றன. அவற்றை மீறிக் கப்பல்கள் பயணித்தே வருகின்றன.
அகழ்வுப் பணிகளின் போதோ, பராமரிப்புப் பணிகளின் போதோ, கப்பல் போக்குவரத்தின் போதோ பாக்கு நீரிணையின் காற்று மண்டலத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை.
உயிரினம்:
சேதுக் கால்வாயின் அகழ்வுப் பகுதியான 75 கிமீ. நீளத்தில் பவளப் பாறைத் தொகுதிகள் எதுவும் இல்லை. ஒதுக்குப்புறம் தேடி, உறையும் தரை நாடி, சுண்ணாம்புக் கூடுகட்ட முனையும் பவளக் குடம்பி வகைகள், பாக்கு நீரிணையின் நீரோட்ட வீச்சை விரும்புவதில்லை. சேதுத் திடல் பகுதியில் கால்வாய் அகழ்வுப் பணி முடிவடையும் இடத்தில் இருந்து 20 கிமீ. தொலைவில் செங்கால் தீவு உள்ளது. பாதுகாப்புக்குரிய உயிரியல் கடல்வனம் அங்கு தொடங்குகிறது; மன்னார் வளைகுடவின் மேற்குக் கரையோரமாகத் தூத்துக்குடித் துறைமுகப் பகுதிவரை 21 தீவுகளையொட்டிப் பிறைவளைவாக இந்த ஒதுங்கு வலையம் நீள்கிறது. சேதுக் கால்வாயின் அகழ்வுப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் மன்னார் வளைகுடாவுக்குள் அமைவதில்லை என்பதால், பாதுகாப்புக்குரிய உயிரியல் கடல்வனம் எந்த வகையிலும் பாதிப்புறாது.
சூரிய ஒளி, பச்சையம், உரம் இவைதான் கடலின் மேற்பரப்பில் மிதக்கும் தாவர நுண்ணுயிர்களின் முதனிலை உணவு உற்பத்திக்கு அடித்தளம். நுண்ணுயிர்த் தாவரங்களை நுண்ணுயிர் விலங்குகள் உண்ண, நுண்ணுயிர் விலங்குகளைச் சிறுமீன்கள் உண்ண, சிறு மீன்களைப் பெரு மீன்களும் சுறாக்களும் விழுங்க, அவற்றுள் மிகச் சிறுபகுதியை மனிதனும் நாடுகிறான். ஆற்று நீருடன் கடலுள் கலந்து உவர் உரமாகும் நைதரசன், பொட்டாசியம் போன்ற ஊட்ட உரங்களைத் தரையிலிருந்து கடலின் மேற்பரப்புக்குக் கொணரும் நீரோட்டக் கலக்கலைப் பாக்கு நீரிணையில் சேதுக் கால்வாய் பெருக்கும். மீன் உற்பத்தி அதிகரிக்க, மீனவர் வளம் பெருகும்.
சுறா, கடற்பன்றி, கடற்பசு போன்ற அளவிற் பெரிய விலங்கினங்கள் ஆழம் அதிகமான, வங்காள விரிகுடாவிலும் மன்னார் வளைகுடாவிலும் பெருந்தொகையாக உள. ஆழம் குறைந்த பாக்கு நீரிணைக்குள் அவற்றின் வரத்துக் குறைவு. கப்பல் போக்குவரத்தால் அவ்விலங்குகள் பாதிப்புறும் என்பது பொருத்தமற்ற வாதம்.
கடலின் தரையிலோ, நீர்த்தொகுப்பிலோ, காற்று மண்டலத்திலோ, உயிரினத் தொகுப்புக்கோ, கால்வாயைத் தோண்டிப் பராமரிப்பதாலோ, கப்பலை ஓட்டுவதாலோ பெருமளவான பாதிப்பு ஏதும் வரக்கூடிய சாத்தியமில்லை. சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது வைத்திருக்கும் முயற்சிக்கு சேதுக்கால்வாயால் பாதிப்பு ஏதுமில்லை.

கொடுமுடி சண்முகம்

நூல் விமர்சனம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன
சேது சமுத்திரம் - கப்பல் கால்வாய்
கொடுமுடி சண்முகம்
பக்கங்கள் 112, விலை 40/-
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 600014
ஆழமற்ற பாக்கு நீரிணையில் ஆழ்கடல் கப்பல்களையும் பயணிக்க வைக்கலாம் என்ற 145 ஆண்டு காலக் கனவு, 2005இல் நனவுக்கு வரத் தொடங்கியுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு திட்டங்களைத் தயாரித்துக் கிடப்பில் போடுவதை வழமையாகக் கொண்ட அரசு, இத் திட்டத்துக்கு ஒருவாறு ஒப்புதலளித்து, பணியையும் தொடங்கியுள்ளது.
காலத்துக்குக் காலம் ஆய்ந்து வரைந்த திட்ட அறிக்கைகள் பலவுள் 1980களில் இலட்சுமி நாராயணன் குழு வரைந்த அறிக்கையும் ஒன்று. அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்குரிய அடிப்படைத் தரவுகளைத் திரட்டி, கள ஆய்வுகளை மேற்கொண்ட தமிழக அரசின் வல்லுநர் குழு உறுப்பினருள் ஒருவர் கொடுமுடி சண்முகம்.
பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணிபுரிந்த காலங்களில் இக் கள ஆய்வுப் பணிக்காகத் தமிழக அரசு இவரை அனுப்பியது. அரசுக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தபின், தன் பணி முடிவடைந்து விட்டதாக அவர் கருதவில்லை. தமிழ் மக்களுக்குடன் தன் இனிய அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினார். சேது சமுத்திரம் கப்பல் கால்வாய் என்ற 112 பக்க நூலைப் பாவை பப்ளிகேஷன்ஸ் மூலம் தந்துள்ளார்.
அறிவியலாளர் ஒருவருக்குரிய கண்ணோட்டத்துடன் இந்த நூலை எழுதியுள்ளார். அதே நேரத்தில் சாதாரண வாசகரை அவர் மறந்துவிடவில்லை.
கள ஆய்வுகள் பற்றித் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. அதுவும் தமிழர் கால்வாய்த் திட்டம் பற்றிய கள ஆய்வுபற்றிய தொகுப்பு, தமிழரின் வளர்ச்சிக்குத் தேவையான ஆவணங்களுள் ஒன்று.
வரை படங்கள் நூலுக்கு அணி செய்கின்றன. அட்டவணைகளை அங்கங்கே தந்திருப்பதால், வாசகர் எளிதாகச் செய்தியைப் புரிந்து கொள்வர். குமரிக் கண்டத்தின் தோற்றம் பற்றிய கட்டுரை, பாக்கு நீரிணையின் ஆழமின்மைக்கான காரணத்தை விளக்குகிறது.
நூலின் அமைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். பதிப்பாசிரியர் ஒருவரின் துணையை நாடியிருக்கலாம். வரலாறு, கள ஆய்வு, சக ஆய்வாளர், தகவல் திரட்டல் எனப் பல்வேறான செய்திகள், அதுவும் தேவையான செய்திகள், நூல் அமைப்பு ஒழுங்கின்மையில் புதைந்துள. தேர்ந்து படித்துப் பயன் பெறும் பணியை வாசகரிடம் விட்டுள்ளனர் ஆசிரியரும் பதிப்பாளரும். ஆசிரியர் எழுதியதை அப்படியே பதிப்பிக்கும் வழமை தமிழ்ப் பதிப்பாளருக்கு உண்டு. இந்த நூல் விதி விலக்கல்ல.
அறிவியலைத் தமிழில் எளிதாகத் தரமுடியும் என்பதற்கு இந்த நூல் நல்லதொரு சான்று.

தினக்குரல் 11.9.2005

தினக்குரல் நாளிதழ்- கொழும்பு 11.09.2005
சேதுகால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை,
கால்வாய்ச் சூழல் தொடர்பாக எதுவும் தெரியாதவர்களே
இதனை எதிர்த்து வருகின்றார்கள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சொல்கிறார்
சர்ச்சைகளை உருவாக்கியுள்ள சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என ஈழத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் கடலியல் ஆய்வாளருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற `காந்தளகம்' நூல் பதிப்பகத்தின் நிறுவனரான அவர், அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த வேளையில், `ஞாயிறு தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார்.
சேதுக் கால்வாயைத் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் அக் கடலுக்குள் போகாதவர்கள். அச்சூழல் தொடர்பாக அதிகம் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இரு மருங்கிலுமுள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் தோண்டும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது எனத் தெரிவிக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்தப் பேட்டியில் மேலும் கூறியதாவது;
1861 இல் கொமாண்டர் டெய்லர் இத்திட்டம் சாத்தியம் என்று முதல் முதலில் கூறினார். பின் தமிழ்நாட்டில் இஃது உணர்வுபூர்வமாக மாறியது. கட்சி வேறுபாடின்றி அனைவரும், அனைத்துத் தமிழர்களும் இதனை எப்போது நிறைவேற்றுவர் எனக் காத்து இருந்தனர்.
விடுதலைக்குப் பின்பு இக்கோரிக்கை கூர்மையடைந்தது. 1958இல் தூத்துக்குடிப் பிரமுகர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை இது தொடர்பாகச் சந்தித்தனர். அச்சந்திப்பில் சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றி வலியுறுத்தினர். 1962 இல் அப்பிரமுகர் குழு இவ்விடயம் பற்றி மீண்டும் ஜவஹர்லால் நேருவுக்கு வற்புறுத்தியது.
1962இல் இத்திட்டத்திற்கு நேரு ஒப்புதல் அளித்தார். இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக நேருவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. இத்திட்டத்திற்காக இந்திய அரசு பணமும் ஒதுக்கியது.
அப்போது இலங்கையில் பிரதமராக இருந்தவர் சிரீமாவோ பண்டாரநாயக்கா. ஜவஹர்லால் நேருவுக்குச் சிரீமாவோ கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில் `இலங்கை சிறிய நாடு. எமக்கு ஒரே ஒரு துறைமுகமே உள்ளது. உங்களது நாடு பெரியது. உங்கள் நாட்டில் துறைமுகங்கள் பல உள்ளன. இச்சேதுக் கால்வாய்த் திட்டம் அமைந்தால், கொழும்புத் துறைமுகத்திற்கே பெரும் பாதிப்பினை அது ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தினை உடன் கைவிடுங்கள்' என எழுதினார்.
இக்கடிதத்தினைப் பெற்றதும் ஜவஹர்லால் நேரு சேதுக் கால்வாய்த் திட்டத்தினைக் கைவிட்டார். இலங்கையைப் பகைத்துக் கொள்ள நேரு விரும்பவில்லை.
அப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தெற்குத் தேய்கிறது, வடக்கு வளர்கிறது என்ற கோஷத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முன்வைத்துப் போராட்டம் நடத்தினர். பின்பு 1967இல் ஆட்சிக்கு வந்த அண்ணா, மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முனைந்தார். கொழும்பு அரசிடமிருந்து எதிர்ப்பு வெளிக்கிளம்பியது. ஒவ்வொரு முறையும் தமிழகம் தில்லியைக் கேட்பதும், கொழும்பின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் தில்லி கைகழுவுவதுமாகக் காலம் கடந்தது.
இதன் பின்னர் தற்போது 40 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவொரு வரலாற்று நிகழ்வு. இவர்களின் ஆதரவின்றி இந்தியாவின் மத்திய அரசு நிலைக்காது. இக்கால்வாய்த் திட்டத்தினை முன்னெடுக்காவிட்டால் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சூசகமாகத் தெரிவித்திருக்கக்கூடும்! இந்நிலையில்தான் மத்தியரசு இத்திட்டத்திற்குரிய பணியினை முன்னெடுக்க ஒப்புதல் அளித்தது. தொடங்கும் திகதியும் ஒதுக்கியது. அடிக்கல் நாட்டிப் பணிகளையும் தொடக்கியதால், 8 கிமீ. நீளம் வரையிலான கால்வாயும் தோண்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் யாவை?
இத்திட்டத்தால் சிறுசிறு பாதிப்புகள் சேதுக் கால்வாயின் இருபக்கமும் உள்ள தமிழ் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டாலும், பாதிப்பினை விட இக்கால்வாய்த் திட்டத்தினால் நன்மைகளே அதிகம்.
பவளப் பாறைகளுக்கு இதனால் பாதிப்பு என்கிறார்கள். கால்வாய்க்காக ஆழமாக்கும் 80 கிமீ நீளத்துக்கோ, அதன் 15 கிமீ. சுற்று வட்டாரத்திலோ குறிப்பிடத்தக்க பவளப் பாறைகள் இல்லை. எனவே, பவளப் பாறைகளுக்கு ஆபத்து வராது.
மேலும், கால்வாய்க்காகத் தோண்டி எடுக்கும் மணலைக் கடலின் 40 மீ. ஆழத்தில் கொட்டுவதால் கடல் கலங்கும்; முதல்நிலை உற்பத்தி பாதிக்கும் என்று சொல்கிறார்கள். வாடைக்காற்றுக் காலத்தில் வலசை நீரோட்டத்துடன் வரும் கங்கை வண்டலின் கலக்கல், பாக்கு நீரிணை முழுவதையும் கலக்கிச் சேறாக்கி விடும். அப்போதுதான் முதல்நிலை உற்பத்திக்குத் தேவையான உரம் கிடைக்கும். கடலில் கலக்கலால் மீன் உற்பத்தி பெருகுமே அன்றிக் குறையாது.
அகழ்வினால் மீனவரின் தொழில் பாதிப்படையும் என்கிறார்கள். 10 ஆயிரம் சகிமீ. கொண்ட பாக்கு நீரிணையில் 600 சகிமீ. பரப்பில்தான் கால்வாய் அகழும் பணி நடைபெறுகிறது. எஞ்சிய 9 ஆயிரத்து 400 சகிமீ. பரப்பளவில் மீனவர்கள் வழமைபோல் மீன்பிடிக்கலாம்.
சரி; சேதுக் கால்வாய்த் திட்டத்தினால் இந்தியாவுக்கு ஏற்படும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அநுகூலங்கள் எவையென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இராணுவ அநுகூலங்கள் பற்றி எனக்குத் தெரியாது. சேதுக் கால்வாயின் இருபக்கமும் வாழும் தமிழ் மக்களுக்கு இதனால் அதிக நன்மைகள் கிட்டும்.
காங்கேயன்துறை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் யாவும் பெரும் துறைமுகங்களாகும். சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேயன்துறை, ஊர்காவற்றுறை மற்றும் தலைமன்னார் ஆகிய ஐந்து துறைமுகங்களும் வளர்ச்சி பெறவேண்டும்.
ஆனால், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளைக் கொழும்பு அரசு எடுக்காது. எனவே, அத்துறைமுகங்கள் இப்போதைக்கு வளராது. இதற்குக் கொழும்பு அரசின் மாற்றாந் தாய்ப் போக்கே காரணம்.
அத்துடன், தமிழகக் கடற்கரையோரமாக, தனுஷ்கோடி, இராமேச்சரம், தொண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீனவர்களுக்காகப் புதிய துறைமுகங்களைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. எந்திர மீன்பிடி வள்ளங்கள் இருந்த நிலை வளர்ந்து, மீன்பிடிக் கப்பல்கள் தமிழகக் கரையில் உலாவரும். கால்வாய் வழியாக மீனவர்கள் இப்பாரிய மீன்பிடிக் கப்பல்களைச் செலுத்திக் கொண்டு வடக்கே வங்காள விரிகுடா, தெற்கே மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிப்பர். ஈழத்துக் கடல் எல்லைகளுக்குள் வருவதைத் தவிர்ப்பர்.
மேலும், ஈழத்து மீனவர்களுக்கும் இவ்வசதி கிடைக்க வேண்டும். இதற்காகத் தமிழீழ அரசு முயல வேண்டும். சரக்குக் கப்பல்கள் இக்கால்வாய் ஊடாக வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைப் பெருக்கும் வாய்ப்புண்டு. தொழில் வாய்ப்பும் பெருகும். அவ்வாறே முதலீடுகளும் அதிகரிக்கும.
இலங்கைப் பசுமை இயக்கம், சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கெதிரான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சேதுக் கால்வாய் திட்டத்தினால் இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் எனக் கூறி அதை எதிர்க்கின்றனரே?
இவ்வெதிர்ப்புக்குரிய அடிப்படை அறிவியல் ஆதாரத்தைக் கூட இவர்கள் காட்டுவதில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 30இல் நடைபெற்ற கருத்தரங்கில் இவ்விதமான கருத்துகளை இவர்கள் கூறினர். பாதிப்புப் பற்றிய பற்றிய கற்பனைப் படங்களைக் காட்டினார்கள். உண்மையில் அவர்களின் புள்ளி விபரங்கள் கற்பனை என்று அங்கே அவர்களிடம் கூறினேன். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்குப் பாதிப்பு இல்லை என நான் விளக்கமாக அங்கு கூறியபோது பலர் அதை ஒப்புக்கொண்டார்கள். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு பாதிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.
அக்கருத்தரங்கில் இக்கால்வாய்த் திட்டத்தால் தொல்லியல் நிலைகள் அழியுமென்று கூறினர். ஆனால் இக்கால்வாயின் ஓரங்களில் எங்கு தொல்லியில் நிலைகள் உள்ளன? கடல்பன்றிகள் அழியும் என்கிறார்கள். உண்மையில் பாக்கு நீரிணையின் மிக அதிக ஆழமே 15 மீ. தான். இங்கு பாலூட்டிகளான திமிங்கலம், கடற்பசு, கடல்பன்றி ஆகியன தற்செயலாக வருகின்றன; இங்கு வாழ்வனவல்ல. மன்னார் வளைகுடாவிலும் வங்காள விரிகுடாவிலுமே அதிகம் வாழுகின்றன. நீர்க் கலக்கல், உவர்மை போன்றன இக்கால்வாய்த் திட்டத்தால் மாறும் எனச் சிலர் கூறுகின்றனர். இதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை.
மேலோட்டமாகப் பேசுவது அல்ல அறிவியல்; களம் சென்று, தகவல் திரட்டி, மாதிரி கொண்டு வந்து, ஆய்வில் சோதனையின் பின் விடைகாண வேண்டும். கண்டவை சரியா எனப் பார்க்க மீண்டும் களப்பணியில் ஈடுபடவேண்டும். இக்கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இதையெல்லாம் செய்யவில்லை. மக்களைத் திசைதிருப்பும் வகையில் வெறும் கற்பனைக் கதைகளையே கூறுகின்றனர்.
இச் சேதுக் கால்வாய் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் கடலுக்குள் போகாதவர்கள். பாக்கு நீரிணைச் சூழல் பற்றித் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இருமருங்கிலும் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் ஆழமாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.
40 இலட்சம் தமிழக மீனவர்கள் இத்திட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்று அங்கு சிலர் கூறியது சுத்தப் பொய். தமிழ் நாட்டில் மொத்த மீனவர் தொகை அண்ணளவாக ஏழு இலட்சமே. இதில் இரண்டரை இலட்சம் மீனவர்கள் கால்வாயினை ஒட்டிய பகுதியிலேயே தொழில் செய்கின்றனர். உண்மையில் இத்திட்டத்திற்கு சில நூறு பேரே தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது இயல்புதானே!
யாழ்ப்பாணக் குடா நாடு மூழ்கிவிடும் என்கிறார்களே?
புவியியல் பற்றி அறியாதவர்களின் கற்பனைக் கூற்றுக்களிவை. இத்தகையன சொத்தை வாதங்கள். கற்பாறைகள் எதனையுமே கால்வாய் அமைக்க உடைக்கவில்லை. 8 மீ. ஆழத்திற்கு மேல் எங்கும் அகழவில்லை. கடல் மட்டம், வற்று வெள்ளம் என்ற வேறுபாடுகள் அனைத்துக் கடல்களுக்கும் பொதுவானவையாகும். கால்வாய் அமைப்பதால் கடல் மட்டம் உயராது. இதனால் யாழ் குடா நாடு மூழ்காது. இது மிகவும் உறுதியானது.
வாடைக்காற்றின் வலசை நீரோட்டக் காலத்தில் வங்காள விரிகுடாவின் நீர் பாக்குநீரிணைக்குள் புகுவதால் ஆண்டு தோறும் கடல்மட்டம் சற்று உயருவது வழமை.
சிரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகச் சேதுக் கால்வாய் தோண்டும் பணியை ஜவஹர்லால் நேரு கைவிட்டதாகக் கூறினீர்கள். அப்படி என்றால் அந்தப் பாதிப்பு இன்று இல்லையா? ஏன் இந்தியா இதை இன்று முன்னெடுக்க வேண்டும்.
கொழும்புத் துறைமுக வளர்ச்சிக்காக 1920இல் மலையாளிகளை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தனர். ஏ. இ. குணசிங்க தலைமையிலான சிங்கள இனவெறித் தலைமை 1939இல் அவர்களை முழுமையாக வெளியேற்றியது.
1956இல் `அப்பே ஆண்டுவ' ஆட்சி வந்ததும் இடதுசாரிகள் தொடராக வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர்.
இதனால்தான் கொழும்புத் துறைமுகம் வீழ்ந்தது. அப்பொழுது வீழ்ந்த துறைமுகம் இன்றுவரை எழுந்திருக்கவேயில்லை. கொழும்புத் துறைமுகம் வளர்வதை விடத் தமிழர் வீழ்வதையே அன்றைய பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயக்க விரும்பினார். இன்றுவரை கொழும்பு சிறந்த துறைமுகமாக வளரவில்லை. இந்தச் சிங்கள இனவெறியர்கள் தமிழரை வளரவும் விட மாட்டார்கள். இவர்களும் வளரமாட்டார்கள். அவ்வாறு தான் சேதுக் கால்வாயினையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கிறார்கள்.
உண்மையில் அன்று ஜவஹர்லால் நேரு இதை ராஜதந்திரமாகக் கையாண்டார். இந்தியா ஒரு பெரிய நாடு. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம் பிடிக்க முயலுகிறது. இதனால்தான் இந்தியா தற்போதும் பெரும் ராஜதந்திரத்தைக் கையாளுகிறது. இதன் அர்த்தம் கொழும்புக்கு இந்தியா கட்டுப்படுகிறது என்பதல்ல. அயலில் உள்ள நாடு என்பதால் மாத்திரம்தான் கொழும்பு சில சலுகைகளைப் பெற்று வருகிறது.
எப்படியோ கால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு உண்டுதானே? ஏன் இலங்கைக்கு நட்ட ஈட்டினை இந்தியா வழங்கக் கூடாது?
கொழும்பு அரசு வெளிக்காட்டும் கோபமெல்லாம் தங்களைக் கேட்காமல் புதுதில்லி இத்திட்டம் பற்றிய முடிவினை எடுத்து விட்டது என்பதே. கொழும்பு அரசிற்கு இக்கால்வாய் பற்றி எழுந்துள்ள பொய்க் கோபத்திற்கு அடிப்படை கிடையாது.
ஏனெனில் தமிழரின் மரபுவழித் தாயகத்தில் விடுதலைப் புலிகளிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளித்து 3 -1/2 வருடங்களாகி விட்டன. தலைமன்னார், காங்கேசன்துறை இரண்டும் உயர்வலயப் பாதுகாப்பில் உள்ளன.
விடத்தல்தீவிலிருந்து பூநகரி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். கால்வாயை ஒட்டிய 70 சதவீதமான ஈழக் கரையோரம் தமிழர் ஆட்சியின் உள்ளது. எனவே இக்கால்வாய் பற்றிப் பேசக் கொழும்பில் ஆட்சியில் உள்ள அரசிற்கு அருகதையில்லை. அப்படிக் கருத்துச் சொல்ல விரும்பினால் கூட ஈழத்தில் ஆட்சியிலிருக்கும் விடுதலைப் புலிகளின் கருத்தை கேட்காமல் தமிழர் சார்பில் உலகிற்கு எக்கருத்தையும் சொல்லக் கொழும்பு அரசிற்கு அருகதை கிடையாது. தேவையெனில் இந்திய அரசானது புலிகளிடம் கருத்துக் கேட்கலாம்.
எதார்த்தம் யாதெனில் இக்கால்வாயின் இரு பக்கத்திலுமுள்ள இரு தமிழ்ப் பகுதிகளின் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் பேசி, பயன்பாடுகளைப் பெருக்கி, தமிழரின் வளர்ச்சிக்கும் கால்வாயின் வெற்றிக்கும் அடித்தளம் வகுக்க வேண்டும்.
மேலும், கொழும்பு அரசானது அனைத்துலக நீதிமன்றம் போகப்போவதாக மிரட்டுகிறது. அதில் தங்களையும் தனித்தரப்பாகச் சேர்க்குமாறு தமிழரின் மரபு வழி தாயகத்தை வியத்தக ஆண்டுவரும் விடுதலைப் புலிகள் அனைத்துலக நீதிமன்றத்தைக் கேட்கவேண்டும்.
தமிழக மக்களின் 144 ஆண்டுகாலக் கனவு இப்போதுதான் நிறைவேறத் தொடங்கியுள்ளது. இக்காலப்பகுதிக்குள் உலகில் நான்கு கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. உலக மக்கள் இவற்றின் மூலம் சாதனை நிகழ்த்திய காலங்களில் தமிழர்கள் தூங்கி விட்டார்கள்.
40 ஆண்டுகாலத் தமிழீழக் கனவை நனவாக்கும் வாயில்படியில் நிற்கிறோம். இவ்வேளையில் தமிழ் நாட்டில் எதிர்ப்பு வந்தால் எங்கள் மனோநிலை எப்படி யிருக்கும்? அதேபோலத்தான் ஈழத் தமிழர் சேதுக் கால்வாயை எதிர்த்தால் தமிழக மனோ நிலையும் அமையும்.
தென்னிலங்கையில் அம்பாந்தோட்டையில் கொழும்பு அரசின் பாரிய துறைமுக முயற்சித் திட்டத்தை எதிர்த்துப் பேச ஈழத்தமிழருக்கோ, இந்திய அரசிற்கோ உரிமையில்லை. அதுபோல் தமிழர் கால்வாய்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கொழும்பு அரசிற்கு யோக்கியதை கிடையாது.
இவ்வாறு மறவன்புலவு க. சச்சிதானந்தன் கொழும்பு சென்றபோது அங்குள்ள நாளிதளான தினக்குரலுக்கு அளித்த செவ்வியில் கருத்துரைத்துள்ளார்.