Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழர் கால்வாய்: தினக்குரல் 11.9.2005

Friday, September 16, 2005

தினக்குரல் 11.9.2005

தினக்குரல் நாளிதழ்- கொழும்பு 11.09.2005
சேதுகால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை,
கால்வாய்ச் சூழல் தொடர்பாக எதுவும் தெரியாதவர்களே
இதனை எதிர்த்து வருகின்றார்கள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சொல்கிறார்
சர்ச்சைகளை உருவாக்கியுள்ள சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என ஈழத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரும் கடலியல் ஆய்வாளருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் புகழ்பெற்ற `காந்தளகம்' நூல் பதிப்பகத்தின் நிறுவனரான அவர், அண்மையில் கொழும்புக்கு வந்திருந்த வேளையில், `ஞாயிறு தினக்குரலு'க்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார்.
சேதுக் கால்வாயைத் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் அக் கடலுக்குள் போகாதவர்கள். அச்சூழல் தொடர்பாக அதிகம் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இரு மருங்கிலுமுள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் தோண்டும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது எனத் தெரிவிக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்தப் பேட்டியில் மேலும் கூறியதாவது;
1861 இல் கொமாண்டர் டெய்லர் இத்திட்டம் சாத்தியம் என்று முதல் முதலில் கூறினார். பின் தமிழ்நாட்டில் இஃது உணர்வுபூர்வமாக மாறியது. கட்சி வேறுபாடின்றி அனைவரும், அனைத்துத் தமிழர்களும் இதனை எப்போது நிறைவேற்றுவர் எனக் காத்து இருந்தனர்.
விடுதலைக்குப் பின்பு இக்கோரிக்கை கூர்மையடைந்தது. 1958இல் தூத்துக்குடிப் பிரமுகர்கள் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை இது தொடர்பாகச் சந்தித்தனர். அச்சந்திப்பில் சேதுக் கால்வாய்த் திட்டம் பற்றி வலியுறுத்தினர். 1962 இல் அப்பிரமுகர் குழு இவ்விடயம் பற்றி மீண்டும் ஜவஹர்லால் நேருவுக்கு வற்புறுத்தியது.
1962இல் இத்திட்டத்திற்கு நேரு ஒப்புதல் அளித்தார். இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக நேருவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. இத்திட்டத்திற்காக இந்திய அரசு பணமும் ஒதுக்கியது.
அப்போது இலங்கையில் பிரதமராக இருந்தவர் சிரீமாவோ பண்டாரநாயக்கா. ஜவஹர்லால் நேருவுக்குச் சிரீமாவோ கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில் `இலங்கை சிறிய நாடு. எமக்கு ஒரே ஒரு துறைமுகமே உள்ளது. உங்களது நாடு பெரியது. உங்கள் நாட்டில் துறைமுகங்கள் பல உள்ளன. இச்சேதுக் கால்வாய்த் திட்டம் அமைந்தால், கொழும்புத் துறைமுகத்திற்கே பெரும் பாதிப்பினை அது ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தினை உடன் கைவிடுங்கள்' என எழுதினார்.
இக்கடிதத்தினைப் பெற்றதும் ஜவஹர்லால் நேரு சேதுக் கால்வாய்த் திட்டத்தினைக் கைவிட்டார். இலங்கையைப் பகைத்துக் கொள்ள நேரு விரும்பவில்லை.
அப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தெற்குத் தேய்கிறது, வடக்கு வளர்கிறது என்ற கோஷத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முன்வைத்துப் போராட்டம் நடத்தினர். பின்பு 1967இல் ஆட்சிக்கு வந்த அண்ணா, மீண்டும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முனைந்தார். கொழும்பு அரசிடமிருந்து எதிர்ப்பு வெளிக்கிளம்பியது. ஒவ்வொரு முறையும் தமிழகம் தில்லியைக் கேட்பதும், கொழும்பின் எதிர்ப்பைச் சமாளிக்கமுடியாமல் தில்லி கைகழுவுவதுமாகக் காலம் கடந்தது.
இதன் பின்னர் தற்போது 40 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவொரு வரலாற்று நிகழ்வு. இவர்களின் ஆதரவின்றி இந்தியாவின் மத்திய அரசு நிலைக்காது. இக்கால்வாய்த் திட்டத்தினை முன்னெடுக்காவிட்டால் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சூசகமாகத் தெரிவித்திருக்கக்கூடும்! இந்நிலையில்தான் மத்தியரசு இத்திட்டத்திற்குரிய பணியினை முன்னெடுக்க ஒப்புதல் அளித்தது. தொடங்கும் திகதியும் ஒதுக்கியது. அடிக்கல் நாட்டிப் பணிகளையும் தொடக்கியதால், 8 கிமீ. நீளம் வரையிலான கால்வாயும் தோண்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் யாவை?
இத்திட்டத்தால் சிறுசிறு பாதிப்புகள் சேதுக் கால்வாயின் இருபக்கமும் உள்ள தமிழ் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்பட்டாலும், பாதிப்பினை விட இக்கால்வாய்த் திட்டத்தினால் நன்மைகளே அதிகம்.
பவளப் பாறைகளுக்கு இதனால் பாதிப்பு என்கிறார்கள். கால்வாய்க்காக ஆழமாக்கும் 80 கிமீ நீளத்துக்கோ, அதன் 15 கிமீ. சுற்று வட்டாரத்திலோ குறிப்பிடத்தக்க பவளப் பாறைகள் இல்லை. எனவே, பவளப் பாறைகளுக்கு ஆபத்து வராது.
மேலும், கால்வாய்க்காகத் தோண்டி எடுக்கும் மணலைக் கடலின் 40 மீ. ஆழத்தில் கொட்டுவதால் கடல் கலங்கும்; முதல்நிலை உற்பத்தி பாதிக்கும் என்று சொல்கிறார்கள். வாடைக்காற்றுக் காலத்தில் வலசை நீரோட்டத்துடன் வரும் கங்கை வண்டலின் கலக்கல், பாக்கு நீரிணை முழுவதையும் கலக்கிச் சேறாக்கி விடும். அப்போதுதான் முதல்நிலை உற்பத்திக்குத் தேவையான உரம் கிடைக்கும். கடலில் கலக்கலால் மீன் உற்பத்தி பெருகுமே அன்றிக் குறையாது.
அகழ்வினால் மீனவரின் தொழில் பாதிப்படையும் என்கிறார்கள். 10 ஆயிரம் சகிமீ. கொண்ட பாக்கு நீரிணையில் 600 சகிமீ. பரப்பில்தான் கால்வாய் அகழும் பணி நடைபெறுகிறது. எஞ்சிய 9 ஆயிரத்து 400 சகிமீ. பரப்பளவில் மீனவர்கள் வழமைபோல் மீன்பிடிக்கலாம்.
சரி; சேதுக் கால்வாய்த் திட்டத்தினால் இந்தியாவுக்கு ஏற்படும் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அநுகூலங்கள் எவையென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இராணுவ அநுகூலங்கள் பற்றி எனக்குத் தெரியாது. சேதுக் கால்வாயின் இருபக்கமும் வாழும் தமிழ் மக்களுக்கு இதனால் அதிக நன்மைகள் கிட்டும்.
காங்கேயன்துறை, தூத்துக்குடி, நாகப்பட்டினம் யாவும் பெரும் துறைமுகங்களாகும். சேதுக் கால்வாய்த் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, காங்கேயன்துறை, ஊர்காவற்றுறை மற்றும் தலைமன்னார் ஆகிய ஐந்து துறைமுகங்களும் வளர்ச்சி பெறவேண்டும்.
ஆனால், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளைக் கொழும்பு அரசு எடுக்காது. எனவே, அத்துறைமுகங்கள் இப்போதைக்கு வளராது. இதற்குக் கொழும்பு அரசின் மாற்றாந் தாய்ப் போக்கே காரணம்.
அத்துடன், தமிழகக் கடற்கரையோரமாக, தனுஷ்கோடி, இராமேச்சரம், தொண்டி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மீனவர்களுக்காகப் புதிய துறைமுகங்களைத் தமிழக அரசு அமைத்துக் கொடுக்கவுள்ளது. எந்திர மீன்பிடி வள்ளங்கள் இருந்த நிலை வளர்ந்து, மீன்பிடிக் கப்பல்கள் தமிழகக் கரையில் உலாவரும். கால்வாய் வழியாக மீனவர்கள் இப்பாரிய மீன்பிடிக் கப்பல்களைச் செலுத்திக் கொண்டு வடக்கே வங்காள விரிகுடா, தெற்கே மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிப்பர். ஈழத்துக் கடல் எல்லைகளுக்குள் வருவதைத் தவிர்ப்பர்.
மேலும், ஈழத்து மீனவர்களுக்கும் இவ்வசதி கிடைக்க வேண்டும். இதற்காகத் தமிழீழ அரசு முயல வேண்டும். சரக்குக் கப்பல்கள் இக்கால்வாய் ஊடாக வருவதால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைப் பெருக்கும் வாய்ப்புண்டு. தொழில் வாய்ப்பும் பெருகும். அவ்வாறே முதலீடுகளும் அதிகரிக்கும.
இலங்கைப் பசுமை இயக்கம், சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கெதிரான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சேதுக் கால்வாய் திட்டத்தினால் இலங்கைக்குப் பல்வேறு பாதிப்புகள் எனக் கூறி அதை எதிர்க்கின்றனரே?
இவ்வெதிர்ப்புக்குரிய அடிப்படை அறிவியல் ஆதாரத்தைக் கூட இவர்கள் காட்டுவதில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் 30இல் நடைபெற்ற கருத்தரங்கில் இவ்விதமான கருத்துகளை இவர்கள் கூறினர். பாதிப்புப் பற்றிய பற்றிய கற்பனைப் படங்களைக் காட்டினார்கள். உண்மையில் அவர்களின் புள்ளி விபரங்கள் கற்பனை என்று அங்கே அவர்களிடம் கூறினேன். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்குப் பாதிப்பு இல்லை என நான் விளக்கமாக அங்கு கூறியபோது பலர் அதை ஒப்புக்கொண்டார்கள். சேதுக் கால்வாய்த் திட்டத்தால் இலங்கைக்கு பாதிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.
அக்கருத்தரங்கில் இக்கால்வாய்த் திட்டத்தால் தொல்லியல் நிலைகள் அழியுமென்று கூறினர். ஆனால் இக்கால்வாயின் ஓரங்களில் எங்கு தொல்லியில் நிலைகள் உள்ளன? கடல்பன்றிகள் அழியும் என்கிறார்கள். உண்மையில் பாக்கு நீரிணையின் மிக அதிக ஆழமே 15 மீ. தான். இங்கு பாலூட்டிகளான திமிங்கலம், கடற்பசு, கடல்பன்றி ஆகியன தற்செயலாக வருகின்றன; இங்கு வாழ்வனவல்ல. மன்னார் வளைகுடாவிலும் வங்காள விரிகுடாவிலுமே அதிகம் வாழுகின்றன. நீர்க் கலக்கல், உவர்மை போன்றன இக்கால்வாய்த் திட்டத்தால் மாறும் எனச் சிலர் கூறுகின்றனர். இதற்கும் அறிவியல் ஆதாரம் இல்லை.
மேலோட்டமாகப் பேசுவது அல்ல அறிவியல்; களம் சென்று, தகவல் திரட்டி, மாதிரி கொண்டு வந்து, ஆய்வில் சோதனையின் பின் விடைகாண வேண்டும். கண்டவை சரியா எனப் பார்க்க மீண்டும் களப்பணியில் ஈடுபடவேண்டும். இக்கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இதையெல்லாம் செய்யவில்லை. மக்களைத் திசைதிருப்பும் வகையில் வெறும் கற்பனைக் கதைகளையே கூறுகின்றனர்.
இச் சேதுக் கால்வாய் தோண்டுவதை எதிர்ப்பவர்கள் கடலுக்குள் போகாதவர்கள். பாக்கு நீரிணைச் சூழல் பற்றித் தெரியாதவர்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு இக் கால்வாயின் இருமருங்கிலும் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்குரிய சேதுக் கால்வாய் ஆழமாக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.
40 இலட்சம் தமிழக மீனவர்கள் இத்திட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்று அங்கு சிலர் கூறியது சுத்தப் பொய். தமிழ் நாட்டில் மொத்த மீனவர் தொகை அண்ணளவாக ஏழு இலட்சமே. இதில் இரண்டரை இலட்சம் மீனவர்கள் கால்வாயினை ஒட்டிய பகுதியிலேயே தொழில் செய்கின்றனர். உண்மையில் இத்திட்டத்திற்கு சில நூறு பேரே தமிழகத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது இயல்புதானே!
யாழ்ப்பாணக் குடா நாடு மூழ்கிவிடும் என்கிறார்களே?
புவியியல் பற்றி அறியாதவர்களின் கற்பனைக் கூற்றுக்களிவை. இத்தகையன சொத்தை வாதங்கள். கற்பாறைகள் எதனையுமே கால்வாய் அமைக்க உடைக்கவில்லை. 8 மீ. ஆழத்திற்கு மேல் எங்கும் அகழவில்லை. கடல் மட்டம், வற்று வெள்ளம் என்ற வேறுபாடுகள் அனைத்துக் கடல்களுக்கும் பொதுவானவையாகும். கால்வாய் அமைப்பதால் கடல் மட்டம் உயராது. இதனால் யாழ் குடா நாடு மூழ்காது. இது மிகவும் உறுதியானது.
வாடைக்காற்றின் வலசை நீரோட்டக் காலத்தில் வங்காள விரிகுடாவின் நீர் பாக்குநீரிணைக்குள் புகுவதால் ஆண்டு தோறும் கடல்மட்டம் சற்று உயருவது வழமை.
சிரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காகச் சேதுக் கால்வாய் தோண்டும் பணியை ஜவஹர்லால் நேரு கைவிட்டதாகக் கூறினீர்கள். அப்படி என்றால் அந்தப் பாதிப்பு இன்று இல்லையா? ஏன் இந்தியா இதை இன்று முன்னெடுக்க வேண்டும்.
கொழும்புத் துறைமுக வளர்ச்சிக்காக 1920இல் மலையாளிகளை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தனர். ஏ. இ. குணசிங்க தலைமையிலான சிங்கள இனவெறித் தலைமை 1939இல் அவர்களை முழுமையாக வெளியேற்றியது.
1956இல் `அப்பே ஆண்டுவ' ஆட்சி வந்ததும் இடதுசாரிகள் தொடராக வேலை நிறுத்தங்களை மேற்கொண்டனர்.
இதனால்தான் கொழும்புத் துறைமுகம் வீழ்ந்தது. அப்பொழுது வீழ்ந்த துறைமுகம் இன்றுவரை எழுந்திருக்கவேயில்லை. கொழும்புத் துறைமுகம் வளர்வதை விடத் தமிழர் வீழ்வதையே அன்றைய பிரதமர் சிரீமாவோ பண்டாரநாயக்க விரும்பினார். இன்றுவரை கொழும்பு சிறந்த துறைமுகமாக வளரவில்லை. இந்தச் சிங்கள இனவெறியர்கள் தமிழரை வளரவும் விட மாட்டார்கள். இவர்களும் வளரமாட்டார்கள். அவ்வாறு தான் சேதுக் கால்வாயினையும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கிறார்கள்.
உண்மையில் அன்று ஜவஹர்லால் நேரு இதை ராஜதந்திரமாகக் கையாண்டார். இந்தியா ஒரு பெரிய நாடு. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இடம் பிடிக்க முயலுகிறது. இதனால்தான் இந்தியா தற்போதும் பெரும் ராஜதந்திரத்தைக் கையாளுகிறது. இதன் அர்த்தம் கொழும்புக்கு இந்தியா கட்டுப்படுகிறது என்பதல்ல. அயலில் உள்ள நாடு என்பதால் மாத்திரம்தான் கொழும்பு சில சலுகைகளைப் பெற்று வருகிறது.
எப்படியோ கால்வாய்த் திட்டத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு உண்டுதானே? ஏன் இலங்கைக்கு நட்ட ஈட்டினை இந்தியா வழங்கக் கூடாது?
கொழும்பு அரசு வெளிக்காட்டும் கோபமெல்லாம் தங்களைக் கேட்காமல் புதுதில்லி இத்திட்டம் பற்றிய முடிவினை எடுத்து விட்டது என்பதே. கொழும்பு அரசிற்கு இக்கால்வாய் பற்றி எழுந்துள்ள பொய்க் கோபத்திற்கு அடிப்படை கிடையாது.
ஏனெனில் தமிழரின் மரபுவழித் தாயகத்தில் விடுதலைப் புலிகளிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளித்து 3 -1/2 வருடங்களாகி விட்டன. தலைமன்னார், காங்கேசன்துறை இரண்டும் உயர்வலயப் பாதுகாப்பில் உள்ளன.
விடத்தல்தீவிலிருந்து பூநகரி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகும். கால்வாயை ஒட்டிய 70 சதவீதமான ஈழக் கரையோரம் தமிழர் ஆட்சியின் உள்ளது. எனவே இக்கால்வாய் பற்றிப் பேசக் கொழும்பில் ஆட்சியில் உள்ள அரசிற்கு அருகதையில்லை. அப்படிக் கருத்துச் சொல்ல விரும்பினால் கூட ஈழத்தில் ஆட்சியிலிருக்கும் விடுதலைப் புலிகளின் கருத்தை கேட்காமல் தமிழர் சார்பில் உலகிற்கு எக்கருத்தையும் சொல்லக் கொழும்பு அரசிற்கு அருகதை கிடையாது. தேவையெனில் இந்திய அரசானது புலிகளிடம் கருத்துக் கேட்கலாம்.
எதார்த்தம் யாதெனில் இக்கால்வாயின் இரு பக்கத்திலுமுள்ள இரு தமிழ்ப் பகுதிகளின் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் பேசி, பயன்பாடுகளைப் பெருக்கி, தமிழரின் வளர்ச்சிக்கும் கால்வாயின் வெற்றிக்கும் அடித்தளம் வகுக்க வேண்டும்.
மேலும், கொழும்பு அரசானது அனைத்துலக நீதிமன்றம் போகப்போவதாக மிரட்டுகிறது. அதில் தங்களையும் தனித்தரப்பாகச் சேர்க்குமாறு தமிழரின் மரபு வழி தாயகத்தை வியத்தக ஆண்டுவரும் விடுதலைப் புலிகள் அனைத்துலக நீதிமன்றத்தைக் கேட்கவேண்டும்.
தமிழக மக்களின் 144 ஆண்டுகாலக் கனவு இப்போதுதான் நிறைவேறத் தொடங்கியுள்ளது. இக்காலப்பகுதிக்குள் உலகில் நான்கு கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. உலக மக்கள் இவற்றின் மூலம் சாதனை நிகழ்த்திய காலங்களில் தமிழர்கள் தூங்கி விட்டார்கள்.
40 ஆண்டுகாலத் தமிழீழக் கனவை நனவாக்கும் வாயில்படியில் நிற்கிறோம். இவ்வேளையில் தமிழ் நாட்டில் எதிர்ப்பு வந்தால் எங்கள் மனோநிலை எப்படி யிருக்கும்? அதேபோலத்தான் ஈழத் தமிழர் சேதுக் கால்வாயை எதிர்த்தால் தமிழக மனோ நிலையும் அமையும்.
தென்னிலங்கையில் அம்பாந்தோட்டையில் கொழும்பு அரசின் பாரிய துறைமுக முயற்சித் திட்டத்தை எதிர்த்துப் பேச ஈழத்தமிழருக்கோ, இந்திய அரசிற்கோ உரிமையில்லை. அதுபோல் தமிழர் கால்வாய்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கொழும்பு அரசிற்கு யோக்கியதை கிடையாது.
இவ்வாறு மறவன்புலவு க. சச்சிதானந்தன் கொழும்பு சென்றபோது அங்குள்ள நாளிதளான தினக்குரலுக்கு அளித்த செவ்வியில் கருத்துரைத்துள்ளார்.

2 Comments:

Blogger முனைவர் மு.இளங்கோவன் said...

பயனுடைய நூலை அறிமுகம்
செய்தமைக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
+9442029053

6:12 AM  
Blogger Unknown said...

என்ன தம்பி உன்னொட ப்லொக் சரி இல்லை
மாத்து font size
மத்த படி எல்லாம் super

3:41 AM  

Post a Comment

<< Home